சிற்றம்பலம் சகாதேவன். யாழ்ப்பாணம்: சிற்றம்பலம் சகாதேவன், அளவெட்டி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
94 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
சிற்றம்பலம் சகாதேவன் (1935-2014), யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர். பர்மாவில் 1924-1943 காலத்தில் புகையிரத நிலைய அதிபராக அவரின் தந்தை கடமையாற்றினார். சகாதேவன் எட்டுவயதுச் சிறுவனாக இருந்தபொழுது ‘பர்மா வழி நடைப்பயணம்’ என்ற பயங்கரமான யுத்தகால அனுபவத்தை சந்தித்துத் தன் பெற்றோருடன் அகதியாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் 1943-1954 காலத்தில் அவர் கற்றபோது தலைசிறந்த விளையாட்டு வீரராகவும் நான்கு ‘தேவன் சகோதரர்’ களில் ஒருவராகவும் அக்காலகட்டத்தில் புகழீட்டினார். வாழ்க்கையின் இறுதிவரை விளையாட்டு அவரோடு ஒட்டிக்கொண்டது. கொழும்பு கொமர்ஷியல் கம்பெனியிலும் பின்னர் இலங்கைக் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திரும் கடமையாற்றிய பின் 1990இல் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இவரது சுயசரிதை தான் வாழ்ந்த பர்மிய வாழ்க்கையிலிருந்து தொடங்கி, பர்மா வழிநடைப் பயண அனுபவங்களினூடாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததையும், அதன் பின்னரான இலங்கை வாழ்க்கையையும் சுவைபடச் சொல்கின்றது. யாழ்ப்பாணத்தின் 20ம் நூற்றாண்டின் ஒரு காலகட்டத்தின் சமூகவியலை இச்சுயசரிதையின் வழியாக அறியமுடிகின்றது.