10903 தோழர் மணியம் நினைவுகள்.

சி.கா.செந்திவேல். கொழும்பு 06: புதிய நீதி வெளியீட்டகம், இல. 121, ஹம்டன் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (கொழும்பு 11: வேர்ல்ட் விஷன் கிராப்பிக்ஸ், இல. 5, முதலாம் மாடி, 2வது ரோகிணி ஒழுங்கை).

xx, 277 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ.

கே. ஏ. சுப்பிரமணியம் (கொல்லங்கலட்டி அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம் – 5.3.1931-27.11.1989) இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், கீரிமலையில் கொல்லங்கலட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது) பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தோழர் மணியம் எனக் கட்சித் தோழர்களால் அழைக்கப்பட்டவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியிலும் முடித்துக் கொண்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தனது 17வது அகவையில் பொறியியல் பயிலுனராகப் பணியில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் கம்யூனிச வாலிபர் இயக்கத்திலும், அதன் பின்னர் 1952 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார். 1953 ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தினார். அன்றைய காலகட்டத்தில் வடக்கு மாகாணத்தில் கம்யூனிச இயக்கத்தை வழிநடத்தி வந்த மு. கார்த்திகேசன், மரு. சு. வே. சீனிவாசகம், பொன். கந்தையா, அ. வைத்தியலிங்கம், எம். சி. சுப்பிரமணியம் போன்றவர்களின் நெருங்கிய தொடர்பினால் கட்சியில் முழுநேர ஊழியரானார். 1964 ஆம் ஆண்டில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கூறாகப் பிளவடைந்தது. இப்பிளவினை அடுத்து, நா. சண்முகதாசன் தலைமையில் மாக்சியம்-லெனினியம், மற்றும் மாவோ சே துங் சிந்தனையில் உருவான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) உடன் சுப்பிரமணியம் தன்னை இணைத்துக் கொண்டார். கே. ஏ. சுப்பிரமணியம் அரசியல்வாதியாக மட்டுமன்றி கலை, இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்தவர். 1974 ஆம் ஆண்டில் தேசிய கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க சில்லையூர் செல்வராசன், கே. டானியல், என். கே. ரகுநாதன் போன்றோருடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டார். பேரவைக்கு க. கைலாசபதி, இ. முருகையன் ஆகியோரது முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார். பேரவையின் தாயகம் இதழ் வெளியிடப்பட இவரது வழிகாட்டல் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன் அதன் ஆசிரியர் குழுவிலும் பங்கேற்றார். இறக்கும் வரையில் அவ்விதழின் ஆசிரியர் தலையங்கங்களை எழுதி வந்தார். கே. ஏ. சுப்பிரமணியம் தொடர்பான இந்நூலை சி.கா.செந்திவேல் அவர்கள் இருபது அத்தியாயங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்