என்.செல்வராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, தை 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைகின்றது. அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ, அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். ‘பூபாலசிங்கமவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்’ என்று அந்நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தன் இரங்கலுரையில் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து ‘பூபாலசிங்கம் புத்தகசாலை தமிழறிஞர் சந்திக்கும் ஒரு அறிவுக் கூடமாகக் காட்சியளிக்கிறது’ என்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி தனது இரங்கலுரையில் ‘தோழமை நிறைந்த வாழ்க்கையொன்று முடிந்து விட்டது. அந்தரங்க சுத்தியுடன் பழகிக் கொண்டவர்களுக்கு அவர் அன்பின் ஆழம் தெரியும். அந்த நட்புரிமையை அனுபவித்தவன் என்கிற வகையில் நான் அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாக இருக்கின்றேன். இங்கு இருக்கும் பொழுது தெரியாது, நான் யாழ்ப்பாணத்துக்கு வந்து, 751 பஸ்ஸால் இறங்கி, 764க்குப் போவதற்கு முன் புத்தகக் கடைக்குள் எட்டிப் பார்க்கும் பொழுதுதான் அந்த வெற்றிடம் எனக்குப் புலப்படப்போகிறது’ என்ற அவரது உணர்வுபூர்வமான வரிகளுள் ஒரு நட்பின் வலி புலப்படுகின்றது. ஆக, ஒரு சாதாரண புத்தகப் பையன் (Paper Boy) தன் விடா முயற்சியால் கற்றோரும் மற்றோரும் நட்புடன் மெச்சி நாடிடும் ஒரு அறிவியல் சாம்ராஜ்ஜியத்தின் மையமாக உருமாற்றம் பெற்ற வரலாறு தான் அமரர் பூபாலசிங்கத்தின் வரலாறு. அதனை அவரது காலத்தில் வாழ்ந்த இருபத்தியாறு பிரமுகர்களின் வாயிலாக இந்நூலில் நூலகவியலாளர் செல்வராஜா பதிவுசெய்திருக்கிறார்.