ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(8), 52 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8354-58-2.
தமிழ் அகராதித் துறைக்கான ஈழத்தறிஞர்களின் பங்களிப்பானது மகத்தானதாகக் கணிக்கப்பெறுகின்றது. சைமன்காசிச்செட்டியவர்கள் 1807 மார்ச் 21ஆம் திகதி புத்தளத்திற்கு அண்மையில் உள்ள கற்பிட்டி என்னும் ஊரில் கப்ரியேல் செட்டியின் மகனாகப் பிறந்தார். பன்மொழி அறிஞரான இவர் இலங்கை அரச சேவையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின்னர் நிர்வாக சேவையில் முதல் இலங்கையராக இணைத்துக்கொள்ளப்பட்டார். அத்துடன் மாவட்ட நீதிபதியாக நியமனம்பெற்ற முதல் இலங்கையராகவும் இவரே திகழ்ந்தார். இலங்கையில் ‘சிலோன் கஸட்டியர்’ என்ற நூலை 1834இல் எழுதியதன் மூலம் இலங்கையில் ஆங்கில நூலொன்றை முதலில் எழுதிய இலங்கையர் என்றும் மதிக்கப்படுகின்றார். 1960ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி அமரத்துவமடைந்த சைமன் காசிச்செட்டியின் பிரமிக்கவைக்கும் பங்களிப்புகள் பல உரிய அங்கீகாரம் பெறாது மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் கிடக்கின்றன என்பதை இந்நூல் கோடிட்டுக்காட்டுகின்றது. இப்பிரசுரம் சைமன் காசிச்செட்டியின் அகராதி முயற்சிகளையும் அத்துறையில் அவர் முன்னோடித் தமிழனாய்த் திகழ்ந்தவாற்றையும் குவிமையப்படுத்துவதாய் இருந்தாலும், அவரது பல்துறைப் பங்களிப்புகளின்பாலும் வாசகர் கவனத்தைத் திசைமுகப்படுத்துவதாய் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் அகராதித்துறையில் வைத்திய அகராதி, புலவர் அகராதி, தமிழ்நூல் விபர அகராதி, கலைச்சொல்லகராதி, இருமொழி அகராதி, திசைச்சொல் அகராதி, எனப் பல பிரிவுகளில் காசிச்செட்டி இயங்கியுள்ளார் என்னும் தகவல்களை இயன்றவரை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். ஞானம் பதிப்பகத்தினரின் ‘ஈழமும் தமிழும்’ என்ற தொடரில் இரண்டாவதாக வெளியிடப்பட்டுள்ள ஆவணநூல் இதுவாகும். 35ஆவது ஞானம் வெளியீடாக வெளிவந்துள்ளது.