10931 நந்தாப் புகழ் பெற்ற நாயகன்: நடிகமணி வி.வி.வைரமுத்து.

வி.என்.மதிஅழகன். சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணா சாலை, 1வது பதிப்பு, 2014. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, இரகிசா கட்டிடம், 68 அண்ணா சாலை).

144 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-81-89708-51-1.

இந்நூல் நடிகமணி வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 – சூலை 8, 1989) அவர்களது வாழ்வையும் பணிகளையும் பற்றி 17 இயல்களில் பேசுகின்றது. இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவரான வைரமுத்து, யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். இவர் காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1938 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகத்தில் மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். தனது ஆசிரியப்பணியைத் துறந்து, ‘வசந்தகான சபா’ என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார். 1950 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்திலேயே வைரமுத்து முதன் முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வைரமுத்துவின் மயான காண்டம் என்னும் இசை நாடகம் இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பவளவிழாவின் போது இவர் பாடி நடித்த ‘நந்தனார்’ இசை நாடகத்தை ஒலிப்பதிவு செய்து இறுவட்டாக வெளியிட்டார்கள். இலங்கை வானொலியில் முதல் முதலாக வெளிவந்த நாட்டுக்கூத்து நாடகம் இதுவாகும். கலையரசு சொர்ணலிங்கம் இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை 1960 ஆம் ஆண்டில் வழங்கிக் கௌரவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு ‘கலாநிதி’ பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தது. வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காகக் கொழும்பு சென்ற போது மாரடைப்பால் 1989 சூலை 8 அன்று அன்று காலமானார். நடிகமணி பற்றிய இந்நூலில், கலாபூஷணம், கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பு, முத்தமிழ் வித்தகர் வைரமுத்து, இராஜபார்ட் வைரமுத்து, மயானகாண்டம், பத்திரப்படுத்திய கையெழுத்துப் பிரதிகள், காங்கேயன்துறையில் மணிவிழா, போர்ச் சூழல், புத்துணர்வு, வைரமுத்து மறைந்தார், நடிகமணிக்கு அஞ்சலி, ஈழத்து நாடக வரலாற்றில் சாதனை படைத்த வைரமுத்து, கலை வளர்ந்த காலம், அரங்க நாயகன் வைரமுத்து, வைரமுத்துவின் இறுதி நிகழ்ச்சி, பாடற் பதிவுகள், தேசிய நாடக மரபைப் பேணி வளர்த்திடுவோம் ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 244907). 

ஏனைய பதிவுகள்