மலர்க் குழு. கனடா: திருமதி மாலினி அரவிந்தன், ரொரன்ரோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (கனடா: ஜே.ஜே. பிரின்டர்ஸ்).
(5), 284 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×17.5 சமீ.
புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் இலக்கிய சேவையைப் பாராட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஊரும் உறவும், கல்வியும் கல்லூரியும், பரிசும் விருதும், புனைவும் புதினமும், இயலும் இசையும், என இம்மலரின் உள்ளடக்கம் ஐந்து பிரிவகளாக வகுக்கப்பட்டு விடயதானங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சர்வதேசப் புகழ்பெற்றதொரு ஈழத்துப் படைப்பாளியை வாழும்போதே கௌரவிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் கனடாவில் இயங்கும் தமிழ் ஊடகங்களும் இலக்கிய ஆர்வலர்களும் தமிழ் வல்லாரும் இந்த நூலை வெளியிட்டிருக்கின்றனர். இம்மலரில் பல முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், வர்ணப்புகைப்படங்கள் என்பனவும் தொகுக்கப்பட்டுள்ளன. அவரது 25 வருடகால இலக்கியப் பணியின் வெட்டுமுகத்தினை வெகு சிறப்பாக இம்மலர் பதிவுசெய்துள்ளது. ஆனந்த விகடன் போன்ற பிரபலமான வார இதழ்களின் வழியாக தமிழகத்தில் தனக்கெனவொரு வாசகர் குழாமைக் கொண்டுள்ள ஒரு சில ஈழத்துப் படைப்பாளிகளுள் குரு அரவிந்தனும் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர்கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி, ஜேரமனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன. இணையத்தில் ‘பதிவுகள்’, ‘திண்ணை’ போன்ற இணையத்தளங்களில் நாடகம், படைப்பிலக்கியம் சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகின்றார்.யுகமாயினி குறு நாவல் போட்டி (2009), கலைமகள் – ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டி (2011)- இரண்டாம் பரிசு, தமிழர் தகவல் இலக்கிய விருது – (கனடா, 2012) ஆகிய கௌரவங்களையும் பெற்றுக்கொண்டவர்.