கே.கிருஷ்ணராஜா, மு.நித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). லண்டன் E6 2BH: விம்பம், 4, Burges Road, East Ham இணைவெளியீடு, நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பீ. ரோடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (சென்னை 600077: மணி ஓப்செட்).
(13), 452 பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 600., அளவு: 25×19.5 சமீ., ISBN: 978-93-5244-060-3.
பதிப்புத்துறை சார்ந்ததும், இந்திய இலக்கியவாதிகளை இலங்கைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் தனது வாழ்நாளின் பெரும்பங்கைச் செலவிட்டவர் இ.பத்மநாப ஐயர். ‘ஐயரின்’ எழுபத்தைந்தாம் ஆண்டு பூர்த்தியை நினைவுகூரும் முகமாக லண்டனில் வெளியிடப்பட்ட சேவை நயப்பு மலர் இது. ஏழு இயல்களில் தொகுக்கப்பட்டுள்ள இம்மலரின் 242 பக்கங்களை உள்ளடக்கும் 1வது இயல் ஐயர்: எண்ணக்கோலங்கள் என்பதாகும். இதில் இலங்கை, இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஐயருடன் தொடர்புள்ளவர்களின் வாழ்த்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 2வது இயல் கனவுகளும் நனவுகளும் என்ற தலைப்பில் ஐயரது மலரும் நினைவுகளை உள்ளடக்கிய சுயசரிதையும், தினக்குரலுக்கு அவர் வழங்கிய நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. வெளியீட்டுடன் ஐயரவர்கள் தொடர்புபட்ட நூல்கள் பற்றிய நூல்மதிப்புரை 3வது இயலில் நூல் மதிப்புரைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பதிப்புத்துறை தொடர்பான எட்டுக் கட்டுரைகள் 4வது இயலில் இடம்பெற்றுள்ளன. மு.நித்தியானந்தன், பழ அதியமான், என்.செல்வராஜா, த.சித்தி அமரசிங்கம், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், ஆ. இரா. வேங்கடாசலபதி, ஆகியோர் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர். 5ம் இயலில் ஆவணப்படங்கள் குறித்த பதிவுகளும், இயல் 6ல் ஐயரின் சாதனைப்பட்டியல்களும், இயல் ஏழில் வண்ணப்படங்களாக அவரது குடும்பப் படங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 2004இல் கனடாவில் இயல்விருது பெற்ற இ.பத்மநாப ஐயரின் வாழ்வும் பணியும் மிக விரிவாக இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.