வல்வை ஆனந்தன் (இயற்பெயர்: வல்வை ந.அனந்தராஜ்). கனடா: ஈ-குருவி டொட்.கொம், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்).
(8), 165 பக்கம், புகைப்படங்கள், விலை குறிப்பிடப்படவில்லை,அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-96845-9-6.
தமிழர் தாயகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இந்திய இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட கொடூர நிகழ்வுகளில் பல, நெஞ்சை அதிரவைக்கும் நிகழ்வுகளாக இருந்து, அவற்றை நேரில் கண்டு பதைபதைத்த எமது மனங்களில் இன்றும் மாறாத வடுக்களாக இருந்து வருகின்றன. அவற்றுள் ஒன்றான 1991ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கோர நிகழ்வுகளின் ஆவணத்தொகுப்பு இது. 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வல்வையில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி அம்மக்களை அந்தந்த இடத்தலிருந்து வெளியேற விடாமல் தடுத்துவிட்டு அவர்கள் மீதும் அவர்களுடைய குடியிருப்புகள் மீதும் மூர்க்கத்தனமான விமானத் தாக்குதலை இராணுவம் மேற்கொண்டிருந்தது. வல்வெட்டித்துறையில், ஸ்ரீலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைச் சித்திரிக்கும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் அந்த வரலாற்றை ஆவணப் பதிவாக்கியுள்ளது. இது முன்னர் ஒப்பரேஷன் வல்வைப் புயல் என்ற தலைப்பில் உதயன் பத்திரிகையில் 16 நாட்களாக தொடராக எழுதப்பட்டிருந்தது. மேலதிக தகவல்களுடன் புகைப்பட ஆதாரங்களுடன் 20 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.