சதா லோகேஸ்வரன். கொழும்பு: சைவத் திரு கா.சிவபாலன், 1வது பதிப்பு, மே 2015. (கொழும்பு 13: கு.அருளானந்தம், அனுஷ் பிரின்டர்ஸ்).
iv, 92 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ.
சட்டத்தரணி சதா லோகேஸ்வரன் எழுதியுள்ள இந்நூல் யாழ்ப்பாணமாவட்டத்தின் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தூர் பற்றியதொரு பிரதேச வரலாற்று நூலாகும். புத்தூரில் சைவப்பணி, புத்தூர் தேரம்பிள்ளையார் கோவில் வருடாந்தத் தீர்த்தத் திருவிழாவும் சித்திரைப் பௌர்ணமித் தினமும், சவுக்கடிச் சந்திச் சுற்றாடல் அன்றும் இன்றும், உடையார் உத்தியோகம் பற்றிய ஓர் பார்வை, புத்தூர் மத்திய மருந்தகம், கோவிற்பற்று, வெள்ளப்பரவை உப்பு ஏரியின் சரித்திரப் பிரசித்தி, புத்தூர் பதியும் பதிசார்ந்த வரலாறும், கங்காதேவி தரிசனம், ஊரும் பெரும், Puttur Tidal Well ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சவுக்கடிச் சந்தி என்ற பெயர் வரக் காரணமான சவுக்குமரத் தோப்புகள் இருந்த இயற்கை வளம் இன்று வீதி அகலிப்பு, மின்சாரத் தொடுப்பு என்பவற்றால் அழிவுற்றதை விபரிக்கிறார், பத்திரிக் கோயிலடி என்ற பெயர் பாதிரி கோவிலடி என்ற பழைய பெயரின் திரிபு என்கிறார். கிராமக்கோடு நிலவிய ஒரு காலத்தை இன்றும் நினைவுபடுத்துவதாயமைந்துள்ள கிராமக் கோட்டடிச் சந்தி என்ற பெயரின் விளக்கத்தைத் தருகிறார். மேலும் புத்தூரின் முதலாவது கிராமசபைத் தலைவர் பாரிஸ்டர் இராமநாதன் என்றும் அவரே பத்து ஏக்கர் காணியை கிராம வளர்ச்சிக்காக அன்பளித்தார் என்றும் ஒரு வரலாற்றுத் தகவலைப் பதிவுசெய்கிறார். நிலாவரை நீர்க்கிணற்றின் முக்கியத்துவம் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் கங்காதேவி தரிசனம் என்ற கட்டுரையில் விபரிக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58262).