10972 சம்பூர் பிரதேசத்தின் தொன்மை.

அருமைநாதன் சதீஸ்குமார். திருக்கோணமலை: வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார், பொது வைத்தியசாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ்).

xvi, 68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-44703-0-9.

நூலாசிரியர் சம்பூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சம்பூர் மகா வித்தியாலயம், திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா  இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். திருக்கோணமலை பொது வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். சம்பூர் பிரதேச வரலாறு கூறும் பல்வேறு தகவல்களையும் திரட்டி இந்நூலை ஆக்கியுள்ளார். திருக்கோணமலை தேசத்தின் நான்கு பற்றுக்களையும் ஒருங்குசேர்த்து ஆட்சி புரிந்த மன்னன் குளக்கோட்டனால் புலமைமிகுந்த குடிமக்களுக்கு பரவணியாக வழங்கப்பட்ட சகல வளங்களையும் கொண்ட சம்பூரணபதியாகிய சம்பூர் என்னும் கிராமத்தின் தோற்றம் பற்றி திருக்கோணமலையில் முதலில் எழுந்த நூல்களில் ஒன்றான கோணேசர் கல்வெட்டு என வழங்கும் கோணேசர் சாசனம் விபரிக்கின்றது. குளக்கோட்டன் மன்னரால் புலவன் வழியிலான ஒருவருக்காக சம்பூரை பரவணியாக செப்புக் கம்பை போட்ட பத்ததியும் வழங்கிச் சிறப்பித்த மண் இதுவாகும். சம்பூரின் தொன்மை மிகுந்த பல சிறப்புகளையும், தற்போது அப்பிரதேசம் கொண்டுள்ள வளங்களையும் கற்பனைக் கலப்பற்ற வகையில் வெளிப்படுத்துவதாக இந்நூல் அமைகின்றது. சம்பூர் கிராமத்தின் தோற்றம் முதல் பிரித்தானியர் ஆட்சி வரை, குளக்கோட்டனின் இலங்கை வருகையும் திருப்பணிக் காலமும், கொட்டியாபுரப்பற்றும் வன்னிமைகளின் ஆட்சியும், கொட்டியாபுரப்பற்றில் காணப்படும் வரலாற்று சாசனங்களில் சில, சம்பூர் ஓர் புவியியல் நோக்கு, இன்றைய சம்பூர், கோயில்கள், சம்பூருடன் தொடர்புடைய பிற பிரதேச ஆலயங்கள், தி/சம்பூர் மகாவித்தியாலயம், தி/சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலயம், இயற்கை சீற்றங்கள், நாடக அரங்கப் பாரம்பரியங்கள், சடங்குகள்-சம்பிரதாயங்கள், சம்பூர் கிராமசபை, கிராமோதய சபைத் தலைவர்கள், விதானை, பரியாரியர், 1950-60களில் சம்பூர், சம்பூர் மக்களால் நினைவுபடுத்தப்படுபவர்களுள் சிலர், சம்பூரில் என் நினைவுகள் சில ஆகிய 18 அத்தியாயத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்