இரா. வினோத். கர்நாடகா மாநிலம்: அறம் பதிப்பகம், ஹென்னூர் மெயின் ரோடு, பெங்களுர் 560077, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
120 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×14 சமீ.
இந்தியாவைச் சேர்ந்த இரா.வினோத்தின் இக்கவிதைநூல் இலங்கை மலையக மக்களின் வலிமிகுந்த வரலாற்றினையும் நிகழ்கால யதார்த்தத்தையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது. கவிஞர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையே பதிவுசெய்வது வழக்கம். இரா.விநோத் போன்ற வெகு சிலரே கடந்த கால வரலாற்றையும் இணைத்துக் கருத்துச்செறிவுமிக்க கவிதையாக்குவர. இலங்கைக்கு வந்த ஒரு சில நாட்களில் மலையகத் தோட்ட மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களது வரலாற்றினை வாய்மொழியாக அறிந்து கொண்ட பின்னர் அம்மக்கள் தொடர்பாக வெளிவந்த ஆய்வுப் பதிவுகளை ஆராய்ந்து அவற்றினையும் உள்ளிர்த்து, தெளிவானதொரு பின்புலத்தில் நின்று தன்னுணர்வைக் கவிதையாகப் பதிவுசெய்வதில் இரா. வினோத் வெற்றி கண்டுள்ளார் எனலாம். இலங்கையில் இருக்கும் மலையக மக்களின் துயர வாழ்வியலை வெளிப்படுத்தும் அதே வேளையில் இம்மக்களின் அபிப்பிராயத்தைக் கேளாது அமுல்படுத்தப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திரும்பி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வாழும் தாயகம் திரும்பிய மலையக உறவுகளின் சோக வரலாற்றையும் கூடவே பதிவுசெய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57359).