சாம்பசிவம் தவமணிதேவி (தொகுப்பாசிரியர்). செங்கலடி: சாம்பசிவம் தவமணிதேவி, உதவி நூலகர், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).
x, 55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
தமிழறிஞர் எப்.எக்ஸ்.சி.நடராசா அவர்களின் ஆக்கங்களின் நூற்பட்டியல் தகவல்கள் ஆண்டுவாரியாகத் தொகுத்துத் தரப்பட்டள்ளது. முதலாவது பதிவு 1953இல் எண்ணெயச் சிந்து என்ற நூலின் பதிப்பாளராக இவரை இனம்காட்டுகின்றது. யாழ்ப்பாணத்திலே காரைநகரிலே பிறந்த இவர் மட்டக்களப்பிலே திருமணம் செய்து அங்கேயே தம்முடைய வாழ்க்கையிலே மிகப்பெரும் பகுதியைக் கழித்து வந்தார். சைவ சமயத்தவராகப் பிறந்து கத்தோலிக்க சமயத்தவராக மாறிய இவர் கத்தோலிக்கப் பெரியார்களையும் கத்தோலிக்க இலக்கியங்களையும் பல இடங்களிலே அறிமுகப் படுத்தியுள்ளமையைக் காணலாம். சுவாமி விபுலானந்தரைக் குருவாகக்கொண்ட இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பேராசிரியராக இருந்து திரும்பிய அவரிடம் பாலபண்டிதம் கற்றார். அதே விபுலானந்தர் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோது, தமிழ்த்துறையில் மாணவரானார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே வித்துவான் பட்டம் பெறுவதற்கு முன்பும் பின்பும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலே விரிவுரை யாளராக விளங்கியுள்ளார். 1952ஆம் ஆண்டிலே அரசகரும மொழித் திணைக்களத்திலே ஆராய்ச்சி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற இவர், மொழிபெயர்ப்புத் துறையில் அத்தியட்சகராகப் பதவி உயர்வு பெற்று, 1971 வரையில் கொழும்பிலே கடமையாற்றினார். 1952ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டனவாகவே, இவருடைய ஆக்கங்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. மட்டக்களப்புத் தமிழகத்தின் வரலாறும் தற்கால நிலைமையும் வெளிவர உதவக்கூடிய நூல்களைத் தொகுத்தும், பதிப்பித்தும் எழுதியும் இவர் பணியாற்றியுள்ளார். ‘மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்’ என்ற நூலின் தொகுப்பாசிரியரான இவர், ‘மட்டக்களப்பு மான்மியம்’ ‘கண்ணகி வழக்குரை (வரம்பெறுகாதை)’ என்னும் நூல்களைப் பதிப்பித்ததோடு பல கட்டுரைகளை எழுதியும் உதவியுள்ளமையைக் காணலாம். ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு இவருடைய சிறந்த ஆக்கங்களுள் ஒன்று. வரலாறு, புவியியல் முதலிய துறைகளிலும் இவர் எழுதிவந்துள்ளார். ஐரோப்பியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கைபற்றி இவர் மூன்று நூல்கள் எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11087).