ப.தெய்வீகன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(12), 13-181 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ.
தமிழர்கள் அரசியலைப்பற்றிக் கதைக்கும் அளவுக்கு அரசியலை அறிவுரீதியாக அணுகுவதுமில்லை ஆராய்வதுமில்லை. மிக அபூர்வமாகவே முறைப்படியமைந்த துறைசார் நிலையிலான ஆய்வுகள் நடப்பதுண்டு. மிகக் குறைந்தளவு நூல்களே இத்துறையில் வெளியாகியுள்ளன. அப்படி வெளியான நூல்களும்; பொது வெளியில் கூர்மையாக வாசிக்கப்படுவதுமில்லை, விவாதிக்கப்படுவதுமில்லை. தமிழ் அரசியல் தலைவர்களே நூல் வாசிப்பதில்லை. பிற சமூகங்களில் தங்களது அரசியல் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் தாம் முன்னெடுக்கும் அரசியலையும் பற்றித் தலைவர்கள் எழுதுகிறார்கள். அவை பொது வெளியில் விவாதிக்கப்படுகின்றன. தமிழில் இந்தப் பண்பு மிக அபூர்வமானது. இடதசாரிகளைத் தவிர்ந்த வேறு எந்தத் தலைவரும் தங்கள் பார்வைகளை முன்வைத்து விவாதித்ததில்லை. தங்களுடைய கோட்பாட்டை முன்னிறுத்த எவரும் உரையாடியதில்லை. ஆனால், இணையத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் ஏராளமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் தினமும் எழுதப்படுகின்றன. இருப்பினும் தமிழ் அரசியலானது அறிவுபூர்வமானதாக வளர்ச்சியடையவில்லை. இத்தகைய பின்னணியில் தெய்வீகனின் 34 அரசியல் பத்தி எழுத்துக்கள் தொகுக்கப்பெற்று நூலுருவில் வெளிவந்துள்ளன. தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் தெய்வீகன் கடந்த 15 ஆண்டுகளாக ‘தமிழ் மிரர்” பத்திரிகையில் எழுதி வருகிறார். அவர் அண்மைக் காலத்தில் எழுதிய பத்திகளே இவை. இவை வெளியானபோது பரவலான வாசிப்புக்குள்ளாக்கப்பட்டு இணையததளங்களில் விவாதிக்கவும் விமர்சிக்கவும் பட்டன.