மீராபாரதி. கனடா: பிரக்ஞை வெளியீடு, 80, டக்ளஸ் ஹேய்க் டிரைவ், மார்க்கம் L3S 2E1, 1வது பதிப்பு, மே 2013. (தெகிவளை: தியாகு கேசவன், டெக்னொ பிரின்ட்).
168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
மீராபாரதியின், ‘மரணம், இழப்பு, மலர்தல்’ கட்டுரைத் தொகுதி, ஒரு வகையான பயிற்சி நூலாகும். இந்நூல், ஒரு மரணத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதலை எமக்கு வழங்குகிறது. வாழ்வில் அனைவரும் எதிர்கொள்ளக் கூடிய மரணம் என்னும் நிதர்சனத்தை, தவிர்க்க முடியாத யதார்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது, அதனை எவ்வாறு கடந்து செல்வது என்று யாரும் எழுத யோசிப்பதில்லை, குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச் சூழலில். பலர் அவ்வாறான விடயங்களை வாசிக்கவும் துணிவதில்லை. ஆனால், அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய, அதுவும் கூட்டு மரணங்களை, கொத்துக் கொத்தான இழப்புகளை எதிர்கொண்ட ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரதும் கையேடாக இருக்க வேண்டிய நூலாக இந்நூல் உள்ளது. மீராபாரதி, இதனை அனுபவபூர்வமாக எழுதியுள்ளார். சிறு வயது முதல், தான் கண்ட, தன்னைப் பாதித்த ஒவ்வொரு மரணங்களையும், அந்த நினைவுகளையும் பிழிந்தெடுத்து, அவற்றுக்கு தனது ‘ஞான’ப் பார்வையை வழங்கி அதை எழுத்தாக்கி உள்ளார். இதில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், மரணத்தை மட்டுமல்ல, உங்களில் ஒருவரை உங்கள் தந்தையை, தம்பியை, தங்கையை, அண்ணனை, அக்காவை, நண்பரைக் கொன்ற ஒரு கொலையாளியை எவ்வாறு எதிர்கொள்வது, பழிவாங்கல் உணர்வை, அந்த அக அதிர்ச்சி (Trauma) உணர்வை எவ்வாறு கடந்து செல்வது பற்றியும் வழிகாட்டப்படுகிறது. அதுவும் வெறுமனே போதனையாக அல்ல. அவரது சொந்த அனுபத்தினூடாக. இந்தத் தொகுப்பிலுள்ள இவரது 23 கட்டுரைகளுக்குமான உழைப்பு இலகுவான காரியமல்ல.