11078 சாணக்கிய நீதிவெண்பா.

சாணக்கியர் (சம்ஸ்கிருத மூலம்), அ.குமாரசுவாமிப் புலவர் (மொழிபெயர்ப்பாளர்). கொக்குவில்: ச.இ.சிவராமலிங்கையர், 1வது பதிப்பு, மாசி 1914. (கொக்குவில்: சோதிடப்பிரகாசயந்திரசாலை).

15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ.

சுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப் புராதனமான வடிவத்தில் சான்றோர்களின் அனுபவங்கள் சுலோகங்கள் போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நீதிக்கோவைகள் என்று தமிழில் சொல்லலாம். ஆத்திசூடி, உலகநீதி போன்ற வடிவங்கள் எல்லாம் இதிலிருந்தே பிறந்தவை என்று கருத இடமிருக்கிறது. சமஸ்க்ருதத்தின் பர்த்ருஹரி முதலாக, காளிதாஸர், பவபூதி, சோமதேவ பட்டர், கல்ஹணர், வேதாந்த தேசிகன், சாணக்கியர் எனப் பலரும் இவ்வடிவத்தில் எழுதியிருக்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மூலநூலை யாழ்ப்பாணத்துச் சுன்னாகப் புலவர் அம்பலவாணபிள்ளை குமாரசுவாமிப் புலவர் (18.01.1855-23.03.1922) தமிழில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். இவர் இளமைக் காலத்தில் மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும் அவ்வூரில் வாழ்ந்த முருகேச பண்டிதரிடமும் கல்வி பயின்றார். 1878 ஆம் ஆண்டு சி. வை. தாமோதரம்பிள்ளை ஏழாலையில் தான் நிறுவிய தமிழ்ப் பாடசாலைக்கு இவரை ஆசிரியராக நியமித்தார். சிறிது காலத்தின் பின் இவரே இப்பாடசாலையின் தலைமையாசிரியராக விளங்கினார். பின்னர் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். மேகதூதக் காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதிவெண்பா ஆகியவை இவர் சமஸ்கிருதத்திலிருந்து மொழிப்பெயர்த்த நூல்கள். தமிழ்ப் புலவர் சரிதம், வினைப்பகுபத விளக்கம், சிசுபால சரிதம், இதோபதேசம், இலக்கியச் சொல்லகராதி, சிவதோத்திரக் கவித்திரட்டு, இரகுவம்ச சரிதாமிர்தம், ஏகவிருத்த பாரதாதி, மாவைப் பதிகம், இலக்கண சந்திரிகை, கலைசைச் சிலேடை வெண்பா – அரும்பதவுரை, கம்பராமாயணம் – பாலகாண்டம் – அரும்பதவுரை, நீதிநெறி விளக்கம் – புத்துரை, தண்டியலங்காரம் – புத்துரை, யாப்பருங்கலக்காரிகை – புத்துரை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2429).

ஏனைய பதிவுகள்