நா.செல்லப்பா. கொழும்பு 3: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை, இல.39/23, நெல்சன் பிளேஸ், 1வது பதிப்பு, கார்த்திகை 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
x, 46 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.
அப்பியாச நெறி, சன்மார்க்க நெறி, பண்ணும் பரதமும் ஆற்றும் பங்கு, தூய ஞானக்கண் தரிசனம், தன் நாமம் கெடுதல், ஆனந்த நடனம், மெய்யுணர்தல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிவநடராஜ திருமூர்த்தத்தின் அற்புதங்கள், அதன் அகத்தே மறையாக ஒளித்துவைத்துக்கொண்டிருக்கும் மறைஞானத்தை அரிதாக வெளிக்கொணர்ந்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் விளக்குகின்றார். அவ்வுருவத் திருமேனியின் அற்புத உண்மைகளை ஐரோப்பியர்கள் வளர்த்துவரும் பௌதீகத் துறையின் சமீபகாலக் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டு ஆனந்த சிவதாண்டவம் அணுக்களுக்குள்ளும் இருப்பதை அழகுற விளக்குகின்றார். சிந்தனா நியதி பிழையாது தத்துவார்த்த விளக்கம் தர, திருவள்ளுவர், திருமூலர், மெய்கண்டார் போன்றோர் மொழியாக்கிய ஆழமான தெளிவுகளை அகப்படுத்தி, இதுவரை யாரும் அவ்வளவு தெளிவாகச் சொல்லியிராத பரதநாட்டியத்தின் நுட்பங்களை நாதவிந்து தத்துவங்களோடு, பஞ்சகலைகட்கு வேறாகிய நிலையில் மேலான சிவகலைகளும் உண்டெனக்கண்டு விளக்குகின்றார். நாதத்தின் வெளிப்பாடாக பண்கள் இருக்க, விந்துவின் வெளிப்பாடாக நடவுகள் இருக்கின்றன என்கிறார். நடவுகளைக் கண்டு சுவைத்துப் பின் கழன்று பண்களோடு இசையும் ஆன்மா நசிப்பும் தலைப்படும் என்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 161985).