சீ.விநாசித்தம்பிப் புலவர். அளவெட்டி: அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர், நாகேஸ்வரம், 2வது பதிப்பு, மார்கழி 2000, 1வது பதிப்பு, தை 2000. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).
216 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.
கந்தனது பெரும்புகழ் பேசும் நூல் கந்தபுராணமாகும். இந்நூல் வசனகாவியமாக உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்களில் எழுதப்பட்டுள்ளன. உற்பத்திக் காண்டம் 26 படலங்களையும், அசுர காண்டம் 43 படலங்களையும், மகேந்திர காண்டம் 21 படலங்களையும், யுத்த காண்டம் 16 படலங்களையும், தேவ காண்டம் 5 படலங்களையும், தக்ஷ காண்டம் 24 படலங்களையும் கொண்டதாகப் பாடப்பட்டுள்ளன. அளவெட்டி வாழ்ந்த புலவர்களில் மிக முக்கியமான ஒருவர் விநாசித்தம்பிப் புலவர். இவரை அருட் கவியெனவும், கவியோகியெனவும், வரகவியெனவும் அறிஞர்கள் பாராட்டுவர். இவர் ஒரு புலவராக மட்டுமல்லாமல் ஒரு சோதிடராகவும், மருத்துவராகவும் பேய்பிணித் தொல்லை போக்கும் அருளாளராகவும் மக்களுக்கு நன்கு பயன்பட்டவர். அளவெட்டி தெற்கு அருணாசலம் வித்தியாசாலையில் தமிழும் அளவெட்டி ஆங்கில பாடசாலையில் ஆங்கிலமும் கற்றவர். ஆரம்பத்தில் கூட்டுறவுச் சங்கக்கடையொன்றில் கடமையாற்றினார். பின்னர் மலை நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகவிருந்தார். அதன் பின்னர் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் பயிற்சி முடித்து பூரணத்துவம் வாய்ந்த ஆசிரியராக மலர்ந்தார்.
இவர் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவர் இசைத்தமிழில் ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39081).