கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் (மூலம்), ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரான் (உரையாசிரியர்), மு.கந்தையா (உரை விளக்கக் குறிப்பு). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தமிழ்நூல்கள் பதிப்பு விற்பனைக் கழகம், 411, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், காங்கேசன்துறை வீதி).
xvi, 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
பரந்துகிடக்கும் பைந்தமிழ் இலக்கிய வரலாற்றில், குரு லிங்க சங்கமங்களை வழிபட்டு, முத்தியின்பம் பெற்ற சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் தனித்தமிழ்க் காப்பியம், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணமாகும். இச்சிவநெறிப் பெருங் காப்பியத்தை இயற்றியவர் சேக்கிழார் நாயனாராவார். அவர் அப்புராணத்தைப் பாடிய வரலாற்றைக் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் இலக்கிய நலங்கொழிக்கும் ஒரு சிறு நூலாக இயற்றியுள்ளார். அதுவே இந்நூலாகும். இந்நூலில் மு.ஞானப்பிரகாசம் அவர்கள் எழுதிய நூலாசிரியர் உமாபதி சிவாசாரியார் வரலாறு, உரையாசிரியர் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் வரலாறு ஆகியனவும், சேக்கிழார் நாயனார் துதி, சேக்கிழார் நாயனார் புராணம் (மூலம்-உரை-குறிப்பு), இ.செல்லத்துரை அவர்கள் தயாரித்த செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பத விஷய அகராதி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. சேக்கிழாரின் வரலாற்றை அறிய உதவும் நூல் இது ஒன்றே இன்றுள்ளது. சேக்கிழார் புராணம் 103 பாடல்களைக் கொண்டது. அனபாய சோழன் எப்பொழுதும் சமண நூலில் மூழ்கிக் கிடந்தான் என்றும், அதனை மாற்றவே சேக்கிழார் ‘பெரிய புராணம்’ நூலைச் செய்தார் என்றும் பெரிய புராண நூலின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் விளக்குகின்றது. யாழ்ப்பாணம் தமிழ்நூல்கள் பதிப்பு விற்பனைக் கழகத்தின் முதலாவது வெளியீடு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34388).