11133 திருத்தொண்டர் புராணம் என்று வழங்குகின்ற பெரியபுராணம்.

ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்), சு.அருள்மொழிச் செல்வன் (பதிப்பாசிரியர்). சிதம்பரம் 608 001: டாக்டர் சு. அருள்மொழிச் செல்வன், அறங்காவலர், தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24 மாலைக்கட்டித் தெரு, 1வது பதிப்பு, 2008. (சிதம்பரம்: சுபம் ஆப்செட் பிரின்டர்ஸ்).

xvi, 332 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21×14 சமீ.

1852இல் ஆறுமுகநாவலர் உரைநடையில் முதற்பதிப்பாக வெளியிட்ட இந்நூல் தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளையினால் மீளவும் 24வது பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் சுவாமிகளால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டர் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும், சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பியத் தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்களையும் உடையதாகவும் அமைக்கப்பெற்றுள்ளது. காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று, சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் ‘பிள்ளை பாதி; புராணம் பாதி’ என்கிற பழமொழி ஏற்பட்டது. ஆறுமுகநாவலர் அவர்கள் செய்யுள் நடையில் இருந்த இவ்விலக்கியத்தை வசனநடையில் ஆக்கித் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60166).

ஏனைய பதிவுகள்