11151 திருச்செந்தூர்.

இரத்தினம் நித்தியானந்தன். லண்டன்: இரத்தினம் நித்தியானந்தன், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மலேசியத் திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் மூன்றாவது அனைத்துலக முருக பக்தி மாநாடு சமய ஞான வேள்வியாக தென் ஆபிரிக்கா-டர்பன் நகரில், தவத்திரு பாலயோகி சுவாமிகளின் அருட்தலைமையில் 5.8.2016 முதல் 7.8.2016 முடிய நடைபெற்ற கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை இதுவாகும். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் ‘திருச்சீரலைவாய்’ என முன்னர் அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவில் பற்றிய வரலாற்றுத் தகவல்களை புகைப்படங்களுடன் இச்சிறுநூல் சுருக்கமாக வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்