வென்றிமாலைக் கவிராயர் (மூலம்), ஞானப்பிரகாசர் நீலகண்டர் (உரையாசிரியர்). நீர்வேலி: வித்துவான் சபாபதிப்பிள்ளை, சிவ.சங். சிவகுருநாதபிள்ளை, சு.சி.சுந்தரம்பிள்ளை, பத்திராதிபர்கள், விஞ்ஞானவர்த்தனி, 1வது பதிப்பு, 1907. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை).
340 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.
திருச்செந்தூர்ப் புராணம் வென்றிமாலைக் கவிராயரால் இயற்றப்பெற்ற நூலாகும். அவர் திருச்செந்தூர் ஆலயத்தின் மடைப்பள்ளியில் பரிசாரகராக விளங்கினார். உரிய நேரத்திற்கு சமையல் செய்து வழங்காததால் அவரை ஆலயத்தில் இருந்து புறந்தள்ளினர் என்றும் இதனால் அவர் செந்தில்வேலவர் மீது பாடிய திருச்செந்தூர்ப் புராணத்தை அன்று ஆலயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை உள்ளது. கிழக்கிலங்கையில் உள்ள ஆலயங்களில் பக்தி பூர்வமாக இப்புராணப் படிப்புப் பிரபலம் பெற்றது. வடக்கிலும் பிரபல ஆலயங்களாகிய மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், இணுவில் கந்தசுவாமி கோவில், புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில், அச்சுவேலி உலவிற்குளம் பிள்ளையார் கோவில் முதலிய பிரபல ஆலயங்களில் இப்புராணம் கந்தசஷ்டி காலத்தில் படிக்கப்பட்டு பயன்சொல்லும் வழக்கம் இருந்தது. நீர்வை மண்ணுக்குப் புகழ் சேர்த்த புராண விற்பன்னர் ஸ்ரீ சிவ. சங்கரபண்டிதர் (1821 – 1870) அவர்களின் புதல்வரே சிவப்பிரகாச பண்டிதர் ((1864 – 1914) ஆவார். நீர்வேலியில் திண்ணைப் பாடசாலை அமைத்து அவர்கள் ஆற்றிய சமஸ்கிருதக் கல்வித் தொண்டால் அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் உள்ளிட்ட பல சமஸ்கிருத விற்பன்னர்கள் உருவாகினர். சிவப்பிரகாச பண்டிதர் ஆக்கிய நூல்களில் திருச்செந்தூர்ப் புராண உரை நூல் முக்கியமானதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 956).
திருச்செந்தூர்ப் புராணம்.
வென்றிமாலைக் கவிராயர் (மூலம்), ச.சிவப்பிரகாச பண்டிதர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 2வது பதிப்பு, ஐப்பசி 1969, 1வது பதிப்பு, 1907. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, வண்ணார்பண்ணை).
(4), 347 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 19.5×13 சமீ.
திருச்செந்தூர்ப் புராணம் உருவானது தொடர்பாக ஒரு ஐதீகக் கதை உள்ளது. திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவர் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை மடைப்பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான். அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்’ என்றார் சாஸ்திரியார். பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க திருச்செந்தூர்ப் புராணத்துக்கு உரையாசிரியராக விளங்கும் ச.சிவப்பிரகாச பண்டிதர் அவர்கள் நீர்வேலிச் சங்கர பண்டிதர் அவர்களின் புதல்வராவார். நாவலர் பெருமானின் வலதுகரமாகத் திகழ்ந்தவரே சங்கர பண்டிதர். இவ்வுரை சைவ பரிபாலனசபை வெளியீடாக 1907இல் முதற்பதிப்பைக் கண்டது. இவ்விரண்டாம் பதிப்பு கந்த சஷ்டித் திருநாளன்று 15.11.1969 வெளியிடப்பட்டுள்ளது.