கா.அப்பாச்சாமி. காங்கேசன்துறை: கீரிமலைச் சிவநெறிக் கழகம், நகுலேசுவர தேவஸ்தானம், கீரிமலை, 1வது பதிப்பு, சித்திரை 1980. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
xxx, 300 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21.5×14 சமீ.
புன்னாலைக்கட்டுவன் கவிஞர் சிகாமணி, பிரம்மஸ்ரீ கா.அப்பாச்சாமி ஐயர் அவர்கள் இயற்றிய இந்நூல் விழிசிட்டி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திரு. செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய உரையுடன் கூடியது. கடவுள் வாழ்த்து, அவையடக்கம், திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், பாயிரப் படலம், தலவிசேடமுரைத்த படலம், தீர்த்த விசேடமுரைத்த படலம், மூர்த்தி விசேடமுரைத்த படலம், நகலமுனி யாத்திரைப் படலம், இராமயாத்திரைப் படலம், நளன் யாத்திரைப் படலம், அர்ச்சுனன் யாத்திரைப் படலம், மாருதப்புரவீகவல்லி யாத்திரைப் படலம் ஆகிய 13 பிரிவுகளில் இந்நூல் விரித்தெழுதப்பட்டுள்ளது. கீரிமலை இலங்கையின் வடகரையில் உள்ள தீர்த்த விசேடம் மிக்க இடம். இங்கு புராதன சிவத்தலம் ஒன்றும் உண்டு. இவ்விடத்தின் புராதன பெயர் திருத்தம்பலை. கோயில் கொண்டிருந்த பெருமானின் புராதன பெயர் திருத்தம்பலேசுவரர். கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் இத்துறையில் நீராடி, அருகிலுள்ள பெருமானை வழிபட்டு வந்ததினாலே கீரிமுகம் மாறப்பெற்றார். இக்காரணங் கொண்டே இவ்விடம் கீரிமலை எனப் பெயர் பெற்றது. இதனை வடமொழியில் நகுலகிரி என்பர். இங்கு இடங்கொண்ட இறைவனின் இக்காலப் பெயர் நகுலேசர் – நகுலேசுவரர். இறைவி நகுலாம்பிகை- நகுலேசுவரி. கோவில் நகுலேசுவரம். இத்தலம் ஆதிச்சோழ மன்னனாகிய முசுகுந்தன், நளன், அருச்சுனன் முதலியோரினால் தொழப்பெற்ற ஒன்றாகும். தீர்த்த-தல யாத்திரைகளுக்குரிய புராதனப் புண்ணிய இடங்களுள் கீரிமலையும் ஒன்று. வடமொழிச் சைவ புராணங்கள் பத்தினுள் கந்தபுராணம் சிறப்பானது. அதில் உள்ள சூதசங்கிதையில் நகுலேசுவரம் பழைமையான யாத்திரைத் தலங்களுள் ஒன்று எனக் குறிக்கப்பட்டுள்ளது.
விசயன் இலங்கை அரசனாக இருந்த போது, இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்ததாக வரலாறு உண்டு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3098).