11178 திருவாதிரை மலர் 1964.

க.சிற்றம்பலம், க.வைத்தீசுவரக் குருக்கள் (மலராசிரியர்கள்). காரைநகர்: ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1964. (சுன்னாகம்: கலாதேவி அச்சகம்).

xii, 75 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

ஜோதிடத்தின்படியும், இந்துப் பஞ்சாங்கங்களின்; படியும் ஒவ்வொரு நாளும் சந்திரன் 27 நட்சத்திரங்களுள் எந்த நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தநாள் அந்த மாதத்தில் அந்த நட்சத்திரத்தினுடைய நாள் ஆகும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவனை வணங்குபவர்களுக்கும் சிவன்கோவில்களிலும் ஒரு முக்கியமான பண்டிகை நாள். தில்லையில் திருவாதிரையில் தான் சிவபெருமான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. தில்லையில் திருவாதிரை விழாவை 10-நாள் விழாவாகவே கொண்டாடுவார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசன விழா எனப்பெயர். ஆருத்ரா என்பது ஆர்த்ரா (ஸ்ரீ ஆதிரை) என்ற வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல். ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரக்கணக்கான அன்பர்களும் சிவனடியார்களும் தில்லையில் குழுமியிருந்துஆண்டவனை வணங்குவர். அன்று தில்லை ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்துவைத்து பூஜைகள் செய்வர். திருவாரூரில் நடக்கும் ஆருத்ரா தரிசனவிழா தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது. திருமயிலையில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா திருஞான சம்பந்தருடைய பூம்பாவைப் பதிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிரைத் திருவிழா சங்கத் தமிழர்களால் சிவனுடைய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டதை பரிபாடல் (71-78) பாடுகிறது. இத்தகைய சிறப்புமிக்க விழாவை ஈழத்துச் சிதம்பரமான காரைநகர் சிவன் கோவிலில் 1964 மார்கழியில் கொண்டாடிய வேளை விநியோகிக்கப்பட்ட மலர் இது. ச.கணபதீஸ்வரக் குருக்கள் (திருவூடல்), சி.சுப்பிரமணிய தேசிகர் (ஆதிரை விழாவும் அம்பாஆடலும்), க.இராமச்சந்திரன் (உயிர் நோயை அகற்றும் திருவாசகத் தேன்), மார்கழித் திருவாதிரை, சு.அருளம்பலவனார் (திருக்கோவையார்த் தலங்கள்), மு.கந்தையா (கண்களிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதா?ஆகுமா?), புலவர் பாண்டியனார் (வாதவூரர் வரலாற்றுக் குறிப்பு), தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் (மணிவாசகர் கண்ட தில்லை), கி.வா.ஜகந்நாதன்(வானமும் வையமும்) ஆகிய ஒன்பது தமிழறிஞர்களின் கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4371).

ஏனைய பதிவுகள்