காளிதாசன் (இயற்பெயர்: க.வீரகத்தி). கரவெட்டி: க.வீரகத்தி, வாணி கலைக் கழகம், 2வது பதிப்பு, மார்ச் 1995, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி).
26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
பிரபஞ்ச ஜோதி அபிராமியின் ஒளி மண்டலத்திற்குள் புகுந்து விடுவதற்குத் துடிக்கும் ஒரு அபிராமிப் பக்தனின் கவிதைகள் இவை. ஜோன் பன்யனின் சுவர்க்கப் பயணியினது தலைச் சுமையிலும் தன் சுமை அதிகம் என்று வருந்தும் இக்கவிஞர், அந்நெரிசலால் நின்றுவிடும் நிலையில் நிற்கும் தரிப்பிலிருந்து தன் வாழ்வின் பயணிப்புப் பாதையைத் திரும்பிப் பார்க்கிறார். சாதனைச்சுவடுகள் தூர்ந்திருப்பதைக் காண்கிறார். ஐந்தாறு வீதமான வேதனைச் சவடுகள் துலாம்பரமாகத் தென்படுகின்றன. அவற்றில் ஒன்று கவிஞரை பெரிதும் நெருடுகின்றது. துயரமும் துன்பமும் அலைமோதுகின்றன. அந்த வேதனைக்கான காரணமும் தானே என உணர்கிறார். அந்த வேதனை தன்னுடன் நில்லாது அப்பாலும் சென்றடைந்து விட்டதை உணர்கிறார். அப்பாலும் சென்றடைந்த ஜீவனை அன்னை அபிராமியிடம் பாதுகாப்புச் செய்தும் விடுகின்றார். சிறகுகள் ஒடிந்துவிட்ட சடாயுவாய் நின்று அன்னை அபிராமியை வேண்டிப் பாடுகின்றார். பண்டிதர் க. வீரகத்தி வடமாகாணத்தில்; கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவர். தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றனார் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் ‘ஓருலகம்’ (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். தனது வாணி கலைக் கழகம் என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்க்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். 1968ல் திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம் நடாத்திய திருவள்ளுவர் தினப்போட்டியில் ‘பரி உரையில் இலக்கணக் குறிப்புகள்” எனும் இவரது கட்டுரை பரிசு பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14496).