சுன்னாகம் வரதராச பண்டிதர் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (குறிப்புரை). பருத்தித்துறை: ச.சோமசுந்தர ஐயர், கலாநிதி யந்திரசாலை, 1வது பதிப்பு, 1924. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை).
40 பக்கம், விலை: 30 சதம், அளவு: 21×14 சமீ.
ஏகாதசி புராணம் ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அவ்விரதம் அனுஷ்டித்தோர் சரிதங்களையும் கூறுகிறது. உருக்குமாங்கதன், வீமன் ஆகியோர் சரிதங்களை இதிற் காணலாம். சிவ விரதங்களுட் சிறந்ததாகிய சிவராத்திரி விரதத்தைக் குறித்துப் புராணம் பாடியது போலவே வரதபண்டிதர் திருமால் விரதங்களுட் சிறந்ததாகிய எகாதசி விரதத்தைக் குறித்து இப்புராணத்தைப் பாடியுள்ளார். ஏகாதசி விரத மேன்மையை, ‘வடநூல் சொன்ன வழிகண்டு தண்டமிழால் வகுத்தல் செய்தான் வரதராச பண்டிதன்’ என இதன் பாயிரச் செய்யுள் குறிப்பிடுகின்றது. இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப்பாக்கள் ஐந்தினையும், அவையடக்கச் செய்யுள் ஒன்றினையும், பாயிரச்செய்யுள் ஒன்றினையும், காலநிர்ணயச் சருக்கம், உருக்குமாங்கதச் சருக்கம், வீமேகாதசிச் சருக்கம் ஆகிய மூன்று சருக்கங்களிலுள்ள 258 பாடல்களை கொண்டு விளங்குகின்றது. கால நிர்ணயச் சருக்கத்திற், கருட புராணம், சூரிய சித்தாந்த புராணம், பாகவத புராணம், கைவர்த்த புராணம், ஆஞ்னேய புராணம், விட்டுணு ரகசிய புராணம், பவிடிய புராணம், பதும புராணம், பிரம புராணம், காந்த புராணம், காளிகா புராணம், நாரத புராணம், வாரக புராணம், வாயு புராணம், மற்ச புராணம், கூர்ம புராணம், ஆதியன ஏகாதசி விரத நிர்ணயத்துக் காதாரமாகக் கொள்ளப்பட்டனவெனக் கூறப்பட்டுள்ளது. இது வரதபண்டிதர் (1656-1716) செய்த நூலாகையால், இது 18ம் நூற்றாண்டுக்குரிய தென்று கொள்ளலாம். இதனை நா. கதிரவேற்பிள்ளை முதன் முதல் 1898இல் அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகள் அரும்பதவுரையுடன் 1924இல் அச்சிட்டார். இந்நூல் அந்தப் பதிப்பாகும். பின்னாளில் இதனைத் தொடர்ந்து ச. சோமாஸ்கந்த ஐயர் 1947ம் ஆண்டிலும், ஆ. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் பதவுரை எழுதி 1958ம் ஆண்டிலும் பதிப்பித்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2455).