செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: செ.இரத்தினப்பிரகாசம், கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி கோவில் (புதுக்கோவில்) தொண்டர் குழு, 115/4 டபிள்யு ஏ சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2001. (நாரஹென்பிட்டியா: ஆர்.எஸ்.ரீ. என்டர்பிரைஸ்).
viii, (10), 130 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
புதுக்கோவில் எனப் பெயர்பெற்ற கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி கோவிலின் பேரில் பாடப்பெற்ற பிரபந்தங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இக்கோவில் 1830இல் நினைக்கமுடிச்சான் வளவு என்ற பெயர்குறிப்பிடப்பட்ட வளவில் ஆரம்பமானது. இந்நூலில் வ.சிவராஜசிங்கம் படைத்த ‘கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்’ நூல் முதலாவது தொகுப்பாகின்றது. இது நூலுருவில் வெளிவந்தவாறாக செ.இரத்தினப்பிரகாசம் வழங்கிய பதிப்புரை, வ.சிவராஜசிங்கம் வழங்கிய மகவுரை ஆகியவற்றோடு முதல் 50 பக்கங்களில் அடங்குகின்றது. பக்கங்கள் 51-89 வரையில் அருணகிரியார் அருளிச்செய்த சேவல் விருத்தமும் உரையும், வேல் விருத்தமும் உரையும், மயில் விருத்தமும் உரையும் இடம்பெற்றுள்ளன. உரைகளை பண்டிதர் ச.சுப்பிரமணியம் வழங்கியுள்ளார். பக்கம் 90-96இல் பழம்பாடலான ‘எட்டிகுடி ஏசல்’ இடம்பெற்றுள்ளது. பக்கம் 97-101 வரை ச.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய ‘கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மான்மியம்’ இடம்பெற்றுள்ளது. தொடந்து பக்கம் 102-104களில் சு.நடேசபிள்ளை வழங்கிய ‘கதிர்காமநாதன் திருப்பள்ளியெழுச்சி’யும், பக்கம் 105-121 இல் ச.சுப்பிரமணியம் இயற்றிய ‘கதிர்காமக் கந்தன் பதிற்றுப்பத்து அந்தாதி’ யும், பக்கம்122-128 இல் அவர் இயற்றிய ‘ஸ்ரீசுப்பிரமணிய புஜங்க தோத்திரம்’ என்ற பக்தி இலக்கியமும் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் மேற்படி கோவிலில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளின் பேரில் பாடப்பெற்ற பாடல்களின் அட்டவணை ஒன்றும் இரு பக்கங்களில் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55536).