11244 போற்றி அருளுக.

செ.தனபாலசிங்கன். கொழும்பு 6: செ.தனபாலசிங்கன், இல. 17, 55ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு 1976. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

xxv, (2), 125 பக்கம், விலை: ரூபா 6., அளவு: 18.5×12.5 சமீ.

ஆசிரியரின் இந்துசமய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.  போற்றி அருளுக, சக்தியை வியந்தது, பேதித்து வளர்த்து எடுக்கும் பெய்வளை, மழை பெய்யாமல் இருக்க முடியுமா?, சிவசக்தி, சக்தி தழைக்கும் சிவம், அமாவாசையில் பூரண சந்திரன், வெற்றிச் சக்தி வீரமாகாளி, கோதையின் இலட்சியக் காதல், திருப்பாவை ஆகிய 10 தலைப்புக்களில் இவை எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர், திருவெம்பாவையின் இறுதிப்பாட்டில் பலமுறை வரும் ’போற்றி அருளுக’ என்ற தொடரை நூலின் தலைப்பாகவும் திருவெம்பாவையின் சிறப்பை எடுத்துக்கூறும் முதற் கட்டுரையாகவும் தந்துள்ளார்.  இறுதி இரண்டு கட்டுரைகளைத் தவிர மற்றவை அம்பிகையின் பெருமையை எடுத்துக்காட்டுவன. சக்தியை வியந்தது என்பது அம்பிகை வெவ்வேறு சக்தியாக நின்று பல்வேறு பெயர்களில் பல தொழில்களை ஆற்றுவதையும் காளிதாசன், பாரதி ஆகிய கவிஞர்கள் அம்பிகையைப் பாராட்டியிருக்கும் பாங்கையும் விளக்குகின்றார். பேதித்து வளர்த்தெடுக்கும் பெய்வளை என்ற கட்டுரையில் மாணிக்கவாசகரின் வரலாற்றை முதலிலும், திருவாசகம், திருக்கோவையார் பாடியதை அடுத்ததாகவும் கூறி பிறகு சிவசக்தியே ஆன்மாவின் பக்குவநிலைக்கு ஏற்றபடி வேறுபட்டு நின்று தொழிற்படுதலையே ‘பேதித்து வளர்த்தெடுத்தல்’ என்று மணிவாசகர் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார். மழை பெய்யாமல் இருக்க முடியுமா என்ற கட்டுரை கற்புடை மகளிர் மழை வேண்டுமென்றால் பெய்யச் செய்யும் ஆற்றலுடையவர்கள் என்று பண்டை நூல்களின் வாயிலாக எடுத்தியம்பி, பின்னர் கன்னிப் பெண்கள் மழை வேண்டுவதற்காகப் பாடும் பாடல்களை திருப்பாவை,  திருவெம்பாவை ஆகிய இரண்டிலும் இருந்து எடுத்தாண்டு விளக்குகின்றார். சக்தி தழைக்கும் சிவம் என்னும் கட்டுரையில் சங்க இலக்கியங்களில் சிவபெருமானையும் சக்தியையும் பற்றி வரும் கருத்துக்களையும் சக்தியின் அருட்பெருக்கத்தையும் சௌந்தர்யலஹரியில் அம்பிகைக்குக் கூறும் ஏற்றங்களையும் விளக்குகின்றார். அமாவாசையில் பூரண சந்திரன், அபிராமிப் பட்டரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி அபிராமி அந்தாதியை விளக்குகின்றது. வெற்றிச் சக்தி வீரமாகாளி- நவராத்திரி வழிபாடு, மாகாளியின் தத்துவம், சிலப்பதிகாரத்தில் கொற்றவையைப் பற்றி வரும் நுட்பமான கருத்துக்களையும் பற்றிப் பேசுகின்றது. இறுதி இரண்டு கட்டுரைகள் முறையே கோதையின் இலட்சியக் காதலையும் திருப்பாவையின் சிறப்பையும் இலக்கிய நயத்துடன் விளக்குகின்றன. தமிழக அறிஞர் கி.வா.ஜகந்நாதன் அவர்களின் விரிவான 18 பக்க அணிந்துரை நூலுக்கு மேலும் அணிசேர்த்துள்ளது.

ஏனைய பதிவுகள்