ஆர்.ஏ.கே. விஜயரெட்ணம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இ.ஆ.க. விஜயரெட்ணம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: Fast Printers 289 – ½ காலி வீதி).
90 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படும் கதைகளையும் செவிவழியாக வழக்கிலுள்ள கண்ணன் தொடர்பான கதைகளையும் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகள் முதல் பகவானின் பகவத்கீதை வரை பல விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மகாலட்சுமி தோன்றி மகாவிஷ்ணுவிற்கு மாலையிடல், சிவபெருமான் பார்வதியை மணம்புரிதல், பிரம்மனின் ஆணவம் சிவனால் அடக்கப்பட்டது, தேவர் தலைவன் இந்திரனை நல்வழிப்படுத்தல், சிவபெருமான் காப்பாற்றப்படுதல், நாரயண மந்திரத்தின் மகிமை, சனகாதியரின் சாபத்தால் இரணியன், இராவணன், கம்சனாகப் பூமியில் பிறத்தல், பூலோகத்தில் அதர்மம் அதிகரித்தலும் அதை அடக்க அவதரித்த கிருஷ்ணரும், குழந்தைக் கண்ணன் தனது வாய்க்குள் பிரபஞ்சத்தைக் காட்டுதல், உரலோடு கட்டப்பட்ட கண்ணன் இரு பெரிய மரங்களை வேரோடு சாய்த்தல், குழந்தை கண்ணனுக்கு பழம் கொடுத்தவள் கூடையில் இரத்தினக் கற்கள் இருத்தல் என இன்னோரன்ன 36 தலைப்புகளில் இக்கதைகள் இடம்பெற்றுள்ளன. கதைகளுக்கு மேலதிகமாக கீதா சுருக்கம் என்னும் பகுதி தத்துவத் துளிகளாக வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46500).