க.வைத்தியலிங்கபிள்ளை. யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கபிள்ளை, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 1913. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம், வண்ணார்பண்ணை).
(6), 8+17 பக்கம், விலை: சதம் 30, அளவு: 21×13.5 சமீ.
‘ஒத்த குலமும், ஒத்த பருவமும், ஒத்த நலமும், ஒத்த குணமு முடையராகிய ஒரு கோமகனும் ஒரு கன்னிகையும் தத்தம் பரிவாரஞ்சூழப் புறப்பட்டுத் தெய்வச்செயலாய் ஒரு பூஞ்சோலையை யடைந்தனர். அங்கே இருவரும் தமியராய்த் தெய்வச் செயலின்வழி எதிர்ப்பட் டொருவரையொருவர் நோக்கினர். நோக்கினவளவில் இருவர் மாட்டும் கழிபெருங் காதலுண்டாவதாயிற்று. இளங்குமரன் கண்டு இவள் தெய்வமாதோ வென்று ஐயுற்றுப் பின் மானுட மகளெனத் துணிந்து, அவள் குறிப்புணர்ந்து தன்வசமின்றிக் கலந்து, பலதுறைப்பட்ட அன்பின் செய்திகளை நிகழ்த்தினன். இருவரும் ஒருவரையொ ருவர் காதலித்தாராயினும், பரிவாரமறியாது களவிலொழுகுவ தன்றி வெளிப்பட வொழுகுதலைத் தவிர்த்தனர். மெய்தொட்டுப் பயிலுவர். புனைந்துரைப்பர். இடம்பெற்றுத் தழுவுவர். தலைவன் வழிபாடு செய்வன். தலைவி மறுப்பள். தலைவன் அவள் கூட்டத்தை விரும்புவன். தலைவி மறுத்து நாணத்தாற் றனது கண்களைப் பொத்துவள். இதுவே ‘நாணிக்கண்புதைத்தல்’ என்னும் துறையாம். இத்துறைமேற் புலவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு செய்யுளே பாடிப் போயினர். அமிர்தகவிராயர்; நானூறு பாடினதும் இத்துறையேயாம். பாரகவி யாகிய அவர்க்கு அது அரிதன்று. நம்போல்வார்க்கு அரிதிலு மரிதேயாம். ஆயினும், யாமும் சில செய்ய முயல்வோமென முயன்று நூறு செய்தாம், செய்துமென்ன? ஆணிமுத்துக்கு முன் போலிமுத்தாயின. அமிர்தகவிராயரது அற்புத கவிகள் பின்னும் பெருமைபெறுமாறு எம் புன்கவிகளை வெளியிடுகின்றோம்.’ (ஆசிரியரின் முகவுரை). ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தால் தம்முள் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு, பின்பு கற்பு வாழ்க்கையில் ஒன்றி இல்லறம் நடத்தும் இனிய நிகழ்ச்சிகளைக் கோத்துத் தரும் நூலே கோவை எனப்படும். அகப்பொருள் செய்திகளை அடிப்படையாகக் கொண்டமையால் இது ‘அகப்பொருள் கோவை’ என அழைக்கப்படும். ஐந்து திணைகளின் நிகழ்வுகளை நிரல்படக் கூறுவதால் இதனை, ‘ஐந்திணைக்கோவை’ எனவும் அழைப்பார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3095).