சி.ந.சதாசிவ பண்டிதர். சிங்கப்பூர்: வண்ணை சி.ந.சதாசிவ பண்டிதர், 1வது பதிப்பு, ஏப்ரல் 1887.(சிங்கப்பூர்: சி.கு.மகுதூம் சாகிபு, தீனோதயவேந்திரசாலை).
(4), 38 பக்கம், சித்திரகவிகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் காமாட்சியம்மை பேரிற் பாடிய வண்ணையந்தாதி (பக்கம் 1-10), காமாட்சியம்மை பேரிற் பாடிய வண்ணைநகரூஞ்சல் (பக்கம் 11-16), சுப்பிரமணிய சுவாமி பேரிற் பாடிய சிங்கைநகரந்தாதி (பக்கம் 17-32), சிங்கப்பூர்ச் சுப்பிரமணிய சுவாமிகள் பேரிற் பாடிய சித்திர கவிகள் (பக்கம் 33-38) ஆகிய பெயர்களில் இயற்றப்பட்ட நான்கு பக்தி இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் தேங் ரோட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 1859இல் எழுப்பப்பெற்ற கோயில் மூலவராகிய தண்டாயுதபாணியே அக்காலத்தில் சுப்பிரமணிய சுவாமிகள் என வழங்கப்பெற்றது. சிங்கப்பூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி எனப்படும் முருகப்பெருமானைத் தலைவனாகக் கொண்டு அவர் மீது பாடப்பெற்ற சிங்கை நகர் அந்தாதி, சித்திர கவிகள் என்னும் இரண்டு பக்தி இலக்கியங்களையும் கி.பி.1887-இல் இயற்றிய சி.ந.சதாசிவ பண்டிதர் சிங்கப்பூர் தமிழ்ப் படைப்பின் முன்னோடியாவார். இந்நூல்களுக்குச் சிறப்புப் பாயிரமாகச் சிதம்பரம் அப்பியாச மடத்தலைவராகிய ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள் இயற்றிய நிலை மண்டில ஆசிரியப்பாவும், சிங்கை நகர் அந்தாதியில் பண்டிதரே பாடிய ஆக்கியோன் பெயர், அவையடக்கம் ஆகியனவும், வண்ணையந்தாதியில் பண்டிதர் பாடிய ஆசிரிய வணக்கச்செய்யுளும் வண்ணை அந்தாதியில் காணப்படும் யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகப்பெருமான் அவர்கள் மாணாக்கரும் மருமகரும் வித்வ சிரோன்மணியாகிய ஸ்ரீமத் ந.ச.பொன்னம்பலம்பிள்ளை அவர்களுடைய மாணாக்கருள் ஒருவராகிய ஸ்ரீமத் வி. செல்லையர் அவர்கள் சொல்லிய வெண்பாக்கள் இரண்டும் சதாசிவ பண்டிதர் வாழ்க்கை பற்றிய செய்திகளை சிறிதளவில் அறிய உதவுகின்றன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4086).