வித்துவான் அ.சரவணமுத்தன் (மூலம்), ஈழத்துப் பூராடனார் (உரையாசிரியர்), அன்புமணி இரா. நாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 2வது பதிப்பு, 1991, 1வது மூலப் பதிப்பு, 1915. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario, M5S 2B3).
xix, 17 பக்கம், விலை: கனேடிய டொலர் 2., அளவு: 21×14 சமீ.
இது மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீமான் சாமிதாசமயில்வாகனார் அவர்களின் மாணாக்கன் அடியார்க்கடியான் அ.சரவணமுத்தன் இயற்றிய ஸ்ரீ மாமாங்க விநாயகர் பதிகம். இதன் மூலப்பதிப்பு, 1915ம் ஆண்டு ஆனிமாதம் ஸ்ரீமான் க.பெ.செல்லையா பிள்ளை அவர்களால் யாழ்ப்பாணம் வயாவிழான் ஜயசிறீ சாரதா பீடேந்திரசாலையில் அச்சிடப்பட்டிருந்தது. அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலுள்ள அமிர்தகழி எனும் இடத்திலுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் அங்கியுடனே சிவலிங்கம் காட்சி தருவதால் அடியார்களால் மாமாங்கப் பிள்ளையார் என்றே மூலமூர்த்தி போற்றப்படுகின்றார். கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது. மாமாங்கேஸ்வரர் ஆலயம் அடர்ந்த மரங்களின் நடுவே அமைதியான சூழலில் நெய்தல் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கும் அதன் வடபுறத்தேயுள்ள அமிர்தகழி எனும் ஊர்மனைக்கும் இடையில் தாமரைப் பூக்கள் நிறைந்த மாமாங்கத் தடாகம் உள்ளது. இதுவே இவ்வாலயத்தின் தீர்த்தக் குளமாகும். இக்குளத்திலேயே ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று மாமாங்கேஸ்வரரின் தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11133).