அல்லாமா ம. முஹம்மது உவைஸ். சென்னை 600001: பஷாரத் பப்ளிஷர்ஸ், 16, அரண்மனைக்காரத் தெரு, 1வது பதிப்பு, மே 1987. (சென்னை 600001: திரீயெம் பிரின்டர்ஸ், 92, அரண்மனைக்காரத் தெரு).
(8), 324 பக்கம், விலை: இந்திய ரூபா 22., அளவு: 18×12.5 சமீ.
1970ம் ஆண்டில் திருமக்கா மாநகருக்குத் துணைவியாருடன் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய நூலாசிரியர் தான் அப்பயணத்தின்போது பெற்ற அனுபவங்களை தினகரன் பத்திரிகைகளிலே கட்டுரைவடிவில் எழுதினார். ஓராண்டு எழுதப்பட்ட அக்கட்டுரைகள் இங்கு நூலுருவாகியுள்ளது. ஹஜ் தொடர்பான சடங்குகள், நிறுவனங்கள் பற்றிய குறிப்புகளை இஸ்லாமிய தமிழிலக்கிய நூல்களில் விளக்கியுள்ளபடி குறிப்பிடத்தக்க வகையில் முதன்முறையாக எடுத்துக் காட்டியுள்ளார். அல்லாமா கலாநிதி ம.முஹம்மது உவைஸ், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழிலக்கியத்துறையின் தலைவராக விளங்கியவர். இவர் இலங்கையின் பாணந்துறையில் உள்ள கொரக்கான என்னும் கிராமத்தில் 15.01.1922 ஆம் நாள் பிறந்தார். தமது தந்தையாரிடம் அரபு மொழிக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் கற்ற பின்னர், ஹேனமுல்ல அரசினர் தமிழ்ப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றார். சரிக்காமுல்லையில் தக்ஸலா வித்தியாலயம் என்னும் ஆங்கிலப் பாட சாலையில் கல்வி பயின்றார். அங்கு பயிலும் போது சிங்கள மொழியையும் பாளி மொழியையும் கற்றார். பாணந்துறையில் புனித யோவான் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர், அதே கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுகப் படிப்பில் சேர்ந்து தமிழ், சிங்களம், வரலாறு, ஆட்சியியல் முதலிய பாடங்களைப் படித்து தேர்ச்சியடைந்தார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1946 ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர், விபுலாநந்த அடிகளாரின் வழிகாட்டலும், ஊக்கமும் உவைசுக்கு பேருதவியாக அமைந்தன. தமிழில் கலைமாணிப் பட்டத்தை (இளங்கலை) 1949 ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் தமிழ் முதுமாணிப் பட்ட (முதுகலை) பாடத்தைப் படித்து ‘இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டு’ என்னும் ஆய்வேட்டையும் சமர்ப்பித்தார். ‘தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்னும் தலைப்பில் முதுமாணிப் பட்டத்திற்குரிய (முது கலைப்பட்டம்) ஆய்வைச் சமர்ப்பித்து 1951 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு தமது முனைவர்பட்ட ஆய்வுக்காக, ‘தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியக் காப்பியங்கள்’ என்னும் ஆய்வைத் தெரிவுசெய்து முனைவர் (கலாநிதி) பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17378).