கானா பிரபா. அவுஸ்திரேலியா: மடத்துவாசல் பிள்ளையாரடி வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
xviii, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ.
கானா பிரபா, யாழ்ப்பாணம்-இணுவிலில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வாழும் எழுத்தாளர், ஊடகவியலாளர். மடத்துவாசல் இணையத்தளத்தினை நடத்தி வருபவர். சிட்னியில் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு நிலையமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றுகின்றார். இவரிடத்தில் குடியிருக்கும் நினைவாற்றல், அவதானம், கற்றதையும் பெற்றதையும் நேயர்களுடனும் வாசகர்களுடனும் பரிமாறிக்கொள்ளும் ஆர்வம் என்பன இந்நூலில் உள்ள கட்டுரைகளின் உருவாக்கத்தின் பின்னணி. அவரது 20 ஆண்டுக்கால இணுவில் கிராம வாழ்வில் நேர்ந்த அனுபவங்கள் பெரும்பாலும் இங்கு பதிவுபெற்றுள்ளன. பெற்றோர், உற்றார், உறவினர், ஊர், பாடசாலைகள், அயற்கிராமங்கள், அவரது மனதில் பதிந்த ஆளுமைகள், ஊரவரின் வாழ்வுமுறை, கொண்டாட்டங்கள், அக்காலத்தைய நிட்டூரங்கள் எல்லாம் அவரது பார்வையினூடாகப் பதிவாகின்றன. கடந்த நூற்றாண்டின் 1980-90 களிலான ஒரு யாழ்ப்பாணத்துக் கிராமத்தின் சராசரி இளைஞனொருவனின் வாழ்வாக இது மலர்ந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் எம்மை அவருடன் இறந்த காலத்தில் பயணிக்க வைக்கின்றது. என் இனிய மாம்பழமே, வருஷப்பிறப்பு வந்திட்டுது, செய்யது பீடியும் இந்தியன் ஆமியும், வெடி கொளுத்தி ஒரு ஊர்ப் பொங்கல், மணியண்ணையும் மேளச்சமாவும், தீவாளி வருஷங்கள், விளையாட்டுப் போட்டியும் விநோத உடைக்கூத்தும், தேரடியில் தேசிகனைக் கண்டேன், எங்களுர் வாசிகசாலைகள், தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு, மாட்டு வண்டிச் சவாரிகள், அண்ணா கோப்பி நடராசா மாமா, எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர், லைப்ரரி சேர், அம்மம்மாவை நினைப்பூட்டும் மாட்டுப் பொங்கல், வரதராஜன் மாஸ்டர், மண்ணெண்ணெயில் பார்த்த படங்கள், சுந்தரப்பா, அருட்செல்வம் மாஸ்டர் வீடு, சிவராத்திரி படக் காட்சி, எங்கட கோவில் கொடியேறி விட்டுது ஆகிய 21 தலைப்புகளில் இவரது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.