சி.அரசரத்தினம்; (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-518-5.
The Historical Foundations of the Economy of the Tamils of North Sri Lanka என்ற தலைப்பில் பேராசிரியர் சி.அரசரத்தினம் எழுதிய சிற நூலொன்று 1982ஆம் ஆண்டில் பிரசுரமாகியிருந்தது. அந்நூலின் தமிழாக்கம் இதுவாகும். தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் நான்காவது உரையாக இது 1982இல் நிகழ்த்தப்பட்டிருந்தது. தமிழர்களின் பொருண்மிய வாழ்க்கையின் அடிப்படைகளை வரலாற்று நோக்கில் ஆசிரியர் விளக்கிக் கூறியிருக்கிறார். நான்கு நூற்றாண்டுக்காலப் பகுதியில் அந்நியர் ஆட்சியின் கீழ் வட இலங்கைப் பிராந்தியத்தின் பொருளாதாரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பது பற்றிய பெறுமதி வாய்ந்த தரவுகளை அவர் தொகுத்துத் தந்திருந்தார். தனது விடயப் பொருளை இரு விரிவுரைகளின் வாயிலாக இங்கு பதிவுசெய்துள்ளார். முதலாவது விரிவுரையில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் வட இலங்கையின் நில உரிமை உறவுகளின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி, தொழில் உறவுகள் என்பன பற்றிப் பரிசீலிக்கிறார். இரண்டாவது விரிவுரையில் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளின் வளர்ச்சியினை இலங்கை சுதந்திரமடைந்தது வரையிலான காலம் வரை பரிசீலனை செய்கின்றார். டச்சுக்காரரும் அதனையடுத்துப் பிரித்தானியரும் இந்நாட்டை ஆட்சிசெய்த காலத்தின் ஆவணச் சான்றுகளைத் தனது விரிவுரைகளுக்கான ஆதாரங்களாக அவர் கொண்டுள்ளார். வட இலங்கையின் தமிழர் வாழ்விடத்தின் பொருளாதார சமூக வரலாற்றின் முக்கியமான பல அம்சங்கள் இவ்விரிவுரைகளில் ஆராயப்பட்டுள்ளன. நவாலிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் சின்னப்பா அரசரத்தினம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்.