ஐ.தி.சம்பந்தன். லண்டன்: சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, London E7 8PQ, 1வது பதிப்பு, மார்ச் 2016. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36வது ஒழுங்கை).
xiv, 199 பக்கம், அட்டவணைகள்;, விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-0-9555359-6-3.
யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ஐ.தி.சம்பந்தன் அவரது சமய, இலக்கிய, வெளியீட்டு, சமூகப் பணிகளுக்கும் அப்பால், ஒரு தொழிற்சங்கவாதியாகவும் அறியப்பெற்றவர். இவர் தமிழ் அரசதுறை ஊழியர்களின் அவலங்களையும் அவர்கள் இனரீதியாக ஒதுக்கப்படுவதையும் உணர்ந்து அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு மொழிவழித் தொழிற்சங்கங்களுடன் இணைந்தார். தமிழ்த் தொழிற்சங்கவாதிகளான கோடீஸ்வரன், சிவஞானசுந்தரம், இராமநாதன், போன்றவர்களின் தொடர்பால் தொழிற்சங்கத்துறையில் ஆழமாக காலைப் பதித்துக்கொண்டார். அரச கூட்டுத்தாபன ஊழியர்களின் நலன் கருதி அவரும் திரு. யேசுதாசனும் கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தைக் கட்டியெழுப்பினார்கள். 1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் அரசதுறை ஊழியர்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. தமிழ் ஊழியர்களின் உரிமைக்கு மொழிவழித் தொழிற்சங்கரீதியாக போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தொழில்வழித் தொழிற்சங்கங்கள் இணைந்து தமிழ்த் தொழிற்சங்கக் கூட்டணியை உருவாக்கினர். அதன் செயலாளர் நாயகமாகப் பொறுப்பேற்று அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் வழிகாட்டலில் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தினாலும், இனக்கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட தமிழ் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதில் திரு. சம்பந்தன் தீவிரமாகச் செயற்பட்டார். 1983 ஜுலை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட 11000 ஊழியர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க முன்நின்று உழைத்தார். இந்தத் தொழிற்சங்க ஈடுபாட்டினால் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் State Sector Employment and Tamils in Sri Lanka என்ற பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆதாரபூர்வமான தகவல்களையும் கொண்டு தொகுக்கப்பட்டதே பத்து அத்தியாயங்களையும் எட்டு பின்னிணைப்புகளையும் கொண்ட ‘தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்’ என்னும் இந்நூலாகும்.