11381 கன்னங்குடா உழுதொழிற் பள்ளு (பள்ளுப் பிரபந்தம்).

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). அன்புமணி இரா.நாகலிங்கம், சக்தி சாந்தன், க.தங்கேஸ்வரி, பரதன் கந்தசாமி (பதிப்புத் தொகுப்பாசிரியர்கள்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஆவணி 2000. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1109 Bay Street, Toronto, Ontario, M5S 2B3).

124 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: கனேடிய டொலர் 5., அளவு: 21×14 சமீ.

பள்ளு என்பது சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பள்ளு நூலினை உழத்திப்பாட்டு என்று அழைப்பதும் உண்டு. உழவுத்தொழிலுடன் தொடர்புடைய பள்ளர் இனமக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நூல் அமையும். பள்ளு நூல்கள் இறைவன், அரசன் முதலானவர்களின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் எழுப்பட்டுள்ளன.

கன்னங்குடா என்பது ஈழத்தின் மட்டக்களப்பை அடுத்த விவசாய ஊர். கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலின் ஆசிரியர் ஈழத்துப்பூராடனார்; எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு, பிற பள்ளு நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு உள்ளது. கடவுளின் பெருமை, அரசனின் பெருமை கூறும் வண்ணம் பிற பள்ளுநூல்கள் இருக்க, இப் பள்ளுநூல் உழவர்களுக்கும்- உழவுத்தொழிலுக்கும் முதன்மைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நெல்வகை, மாட்டுவகை, உழுதொழில் மக்களின் பேச்சுவழக்குகள், கூத்துவகைகள், கலையுணர்வு,காதல்வாழ்க்கை,உழவுமுறை முதலியவற்றை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சிற்றிலக்கியம் என்ற பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் வாழும் காலத்து வாழ்க்கையினையும் சமூக நடப்புகளையும் ஆசிரியர் இணைத்து எழுதியுள்ளார். இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபாங்கு கூத்துகள்(தென்மோடி,வடமோடி) படைக்கப்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்தனர். இங்கு உழவர்களே மிகுதியாக உள்ளனர். அவர்களின் வாழ்வியல் சார்ந்த செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன. மட்டக்களப்பு மாநிலத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் வயற்களச்சொற்கள் மிகுதி. அச்சொற்கள் யாவும் உழவுத்தொழிலின் தொழில்நுட்பச் சொற்களாகும். அச்சொற்களையும், அச்சொற்களைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் வண்ணம் இந்நூல் வெளிவந்துள்ளது. கடவுள் வணக்கம்,பாடுகளம் பற்றிய சிறப்பு, போடியார் எனப்படும் பண்ணையாரின் வீட்டு அமைப்பு, போடியாரின் வருகை,வயல்வேலை தொடங்குதல், வயல்அதிகாரி, முல்லைக்காரன் (வேலையாள்)தோற்றம்,உழவர்களின் மனைவிமார் தோற்றம்,கழனிக்கன்னியர் நாட்டுவளம் பாடுதல்,போடியார் படியளத்தல்,போடியாரிடம் மள்ளர் மாரியம்மன் சடங்கு செய்ய வேண்டுதல், மழைவேண்டிப் பூசை செய்தல்,மழைபொழிதல்,வெள்ளம் வடிதல்,மட்டக்களப்பு வாவியின் சிறப்பு, ஆற்றுமீன்கள்,வயல்வேலை தொடக்கம்,மாட்டுவகைகள்,போடியார் உழவைத் தொடங்குதல்,கலப்பை வகை, அமைப்பு,நெல்வகை, இளையபள்ளியின் மோகத்தால் பள்ளன் கடமை தவறல்,பண்ணைக்காரன் முருகனை வினவல், இளையாள்-மூத்தாள் ஏசல்,போடியார் முருகனைக் கண்டித்தல்-தண்டித்தல்,இரு மனைவியரும் மன்னிக்க வேண்டுதல், முருகனை மாடு முட்டுதல்,இரு மனைவியரும் புலம்பல்,போடியார் பொறுப்பேற்றல், முருகன் வேளாண் வெட்டுக்கு ஆயத்தம் செய்தல்,வசந்தன் கூத்து, போடியார் வீட்டு விருந்து,போடியாரின் அன்புரை, கள்ளுண்டுமகிழல், புதுப்புனலாடல், போடியாரின் புரட்சி எண்ணம் முதலியவற்றை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது. கன்னங்குடா உழுதொழிற் பள்ளு பழைமையும் புதுமையும் கைகோர்க்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. சென்ற திசையில் செல்லாமல் புது திசைகளை அமைத்துள்ள ஆசிரியர் பள்ளு இலக்கிய உலகில் பழந்தமிழ்க் கலைகளையும், சொற்களையும் வெளிப்படுத்தித் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20917).

ஏனைய பதிவுகள்