இ.முரளீதரன். யாழ்ப்பாணம்: சுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு, சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
32 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 20., அளவு: 20×14 சமீ.
இந்நூலில் ஆஸ்துமா பற்றிய விடயங்கள் விளக்கமான முறையில் வினா-விடை வடிவில் அமைந்துள்ளன. ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் சந்தேகங்களை நீக்கும் நூல். ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட (reversible) சுருக்கம் மற்றும் இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் (severity) நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் (frequency) மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும் பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும். இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. மீண்டும் மீண்டும் இந்த நோயின் பாதிப்புக்கு உட்படுபவர்களுக்கு தூக்கமின்மை, பகலில் களைப்பு போன்றவை இருப்பதால், அவர்களால் தமது நாளார்ந்த செயல்களைச் சரிவரச் செய்ய முடியாத நிலை காணப்படும். உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள 2011 ஆம் ஆண்டு மே மாத அறிக்கையின்படி, உலகில் 235 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. ஏனைய நீடித்தஃநாட்பட்ட நோய்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு வீதம் குறைவாக இருப்பினும், 2005 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 255000 மக்கள் இந்நோயால் இறந்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.