த.ம.தேவேந்திரன். வவுனியா: முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, மார்கழி 1993. (ராகம: ஒலிம்பியாட் பதிப்பகம், Rifqa’s Publishers, 1/1 St. Mary’s Road, Mahabage).
(8), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டாகும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப முயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். எந்த வீரரும் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும். முழங்கை வரையிலும், விரல்களாலும் பந்தை தட்டி மேலெழும்பச் செய்யலாம். எழும்பிய பந்தை எதிரணி பக்கம் ஓங்கி அடிக்க (Spike-அறைந்தடித்தல்) உள்ளங்கையால் அடிக்கலாம். ஒருவர் தொடர்ந்து ஒரு முறைக்கு மேல் பந்தை தட்டக் கூடாது. பந்து தங்கள் பக்கம் வந்ததும் மூன்று தட்டுதலுக்கு மிகாமல் எதிரணி பக்கம் திருப்பியனுப்ப வேண்டும். பந்தை முதலில் தட்டுதல் ‘சர்வீஸ்’ (தொடக்க வீச்சு) எனப்படும். அது எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து வலையில் மோதாமல் எதிரணியினரின் பகுதிக்கு செலுத்த வேண்டும். எதிரணி பக்கத்தில் இருந்து வரும் பந்தை வலை அருகிலேயே தடுத்தாடல் blocking எனப்படும். கைப்பந்தாட்டம் அமெரிக்க விளையாட்டுப் பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895ல் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் 1964ம் ஆண்டு இவ்விளையாட்டு, ஆண் – பெண் இரு பாலாருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்டு வந்த இவ்வகை தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது. விளையாட்டத்துறை விரிவுரையாளரான நூலாசிரியர் வவுனியா, இரம்பைக்குளத்தைச் சேர்ந்தவர். கரப்பந்தாட்டம் பற்றிய விரிவான பயிற்சிக்கான நூலாகின்றது.