அரசகேசரி(மூலம்), சி.கணேசையர் (புத்துரை), உ.வே.சாமிநாதையர் (சிறப்புப் பாயிரம்), அ.குமாரசுவாமிப் புலவர் (ஆசிரிய விருத்தம்). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக் கட்டுவன், பதிப்பு விபரம் தரப்படவில்லை (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை.)
(7), 363 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இரகுவம்மிசம் என்ற இந்நூலிலே திலீப மகாராசன் காமதேனுவை வழிபட்டு இரகு என்பவனை புத்திரனாக பெற்ற கதையும், இரகுவின் கதையும், இரகுவின் மகன் அயன் கதையும், அயன் மகன் தசரதச் சக்கரவர்த்தி கதையும், தசரதன் மகன் இராமன் கதையும், இராமன் மகன் குசன் கதையும் சொல்லப்பட்டுள்ளன. இரகுவம்மிசம் ஈழத்தெழுந்த முதற் காவியநடையமைந்த நூலாகும். வழமொழியில் காளிதாச மகாகவி இயற்றிய இரகுவம்சம் என்னும் காவியத்தின் தமிழாக்கமே இந்நூலாகும். இதனைத் தமிழிற் காவியமாகச் செய்து தந்தவன் அரசகேசரி என்னும் புலவனாவான். இவன் யாழ்ப்பாணத்திலிருந்து அரசோச்சிய ஆரியச் சக்கரவர்த்திகள் குலத்தவனென யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப்புலவரும் சுவாமி ஞானப்பிரகாசரும் கூறுவர். கி.பி 1591 முதல் 1616 வரை யாழ்ப்பாணத்தில் அரசாண்ட எதிர்மன்னசிங்கன் என்ற எட்டாம் பரராசசேகரனின் சகோதரன் என்று போர்த்துக்கேய சரித்திர ஆசிரியர் குவேறோசும், அம் மன்னனது மருமகன் என்று யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியரும் அரசகேசரியை விவரிப்பர். அம்மன்னன் வேண்டுகோட்படியே அரசகேசரி இந்நூலைச் செய்தானென்பது அதன் பாயிரச்செய்யுளிலிருந்து அறியமுடிகின்றது. இந்நூலின் காலமும் எட்டாம் பரராசசேகரன் காலமாகும். இந்நூல் பொதுக்காண்டம், சிறப்புக்காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது. பொதுக்காண்டத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், அரசியற் படலம், குறைகூறு படலம், தேனுவந்தனப் படலம், இரகுவுற்பத்திப்படலம், யாகப்படலம், திக்குவிசயப் படலம், அயனுதயப்படலம், அயனெழுச்சிப் படலம், மாலையீட்டுப்படலம், கடிமணப் படலம், மீட்சிப் படலம், இரகு கதியுறு படலம், இந்துமதி பிறப்பு நீங்கு படலம் எனப் பதினாறு படலங்களும், சிறப்புக் காண்டத்திலே தசரதன் சாபமேற்ற படலம், திருவவதாரப் படலம், சீதை வனம்புகு படலம், இலவணன் வதைப்படலம், சம்புகன் வதைப்படலம், அவதார நீங்கு படலம் என ஆறு படலங்களும், பொதுச் சிறப்புக் காண்டத்திற் குசன் அயோத்தி செல் படலம், வாகுவலயப் படலம், முடிசூட்டுப் படலம், குலமுறைப்படலம் என நான்கு படலங்களும் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10699).