அப்துல் காதர் லெப்பை. பதுளை: அல்-அதான் பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, டிசெம்பர் 1974. (பதுளை: பதுளை அச்சகம், 235, லோவர் வீதி).
30 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18.5×12.5 சமீ.
அப்துல் காதர் லெப்பை (1913.09.07 – 1984.10.07) காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 1934 இல் கண்டி உடதலவின்னை தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி 1939 இல் கல்முனை நற்பிட்டிமுனைப் பாடசாலையில் கல்வி கற்பித்துப் பின்னர் 1943 இல் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தமிழகத்தில் இவர் தாருல் இஸ்லாம் பத்திரிகையில் அதான் என்னும் புனைபெயரில் விடுதலை உணர்ச்சிக் கவிதைகளை எழுதியவர். தினகரனில் ஆய்வாளன் என்னும் புனைபெயரில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கல்முனையில் முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார், அப்துல் காதர் லெப்பை இலங்கை முஸ்லிம் இலக்கியத்தில் குறிப்பாக கவிதைத் துறையில் ஒரு தலைசிறந்த கவிஞர். அவர் இயற்றிய ‘இக்பால் இதயம்’ (1961), ‘ருபையாத்’ (மொழிபெயர்ப்பு, 1965), ‘இரசூல் சதகம்’ (1966), ‘மெய்நெறி’ (1966), ‘செய்னம்பு நாச்சியார் மான்மியம்’ (1967), ‘முறையீடும் தேற்றமும்’ (1970), ‘நான்’ (1986), ‘பாத்தும்மா சரிதை’ (1987), ‘ஜாவித் நாமா’ (மொழிபெயர்ப்பு, 1989), ‘தஸ்தகீர் சதகம்” (1990), ‘எதிரொலியும் மறை அந்தாதியும்’ (2002), ‘காலம் மறவாக் கவிதைகள்’ (2003) ஆகிய நூல்களும் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த நூற்றுக்கணக்கான தனிப்பாடல்களும் அவரது கவித்திறனுக்கும் கருத்தியலுக்கும் படிமங்களுக்கும் தக்க சான்றுகளாகும். ‘கார்வான் கீதம்’ அவர் இயற்றிய மற்றுமொரு செய்யுள் இலக்கியமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23931).