நடா சிவராஜா (புனைபெயர்: தமிழ்க் கிறுக்கன்). கோயம்புத்தூர்: தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை, கோவை 641017, 1வது பதிப்பு, ஜுன் 2012. (கோயம்புத்தூர்: 641012: ஐடியாஸ் டிசைனிங் அன்ட் பிரிண்டிங்).
xxviii, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ‘தமிழ்க் கிறுக்கன்’ கவிஞர் நடா சிவராஜா எழுதிய கவிதைத் தொகுதி. இவருடைய பாடுகளம் தாய்நிலமும் புகலிடமுமாக விரிகின்றது. சிறுவயதில் தனது தாய்மண்ணில் தான் கண்ட, அனுபவித்த காட்சிகளையும் சம்பவங்களையும் இவர் கவிதைகளாக்கியிருக்கிறார். புலம்பெயர்ந்து லண்டன் வந்தபின்பு புகலிடத்தில் நடக்கும் விசயங்கள், மனதை உறுத்திய காட்சிகள் எல்லாம் இவரது ஆழ்மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களாகக் கொப்பளிக்கின்றன. பல பாடல்களில் கவிஞர் வாழ்ந்த மண்ணின் மணம் வீசுகின்றன. இவர் ஊரின் பெரியகுளம் பற்றிய கவிதையை ரசிக்க முடிகின்றது. தனது நாட்டின், தனது தாய்மண்ணின் தற்போதைய நிலை கண்டு ஆதங்கப்படுகின்றார். இவரின் பள்ளிக் காலத்து நினைவுகளை ‘பள்ளியில் துள்ளிய காலம்’ என்ற கவிதையில் அழகாகக் காட்சிப்படுத்துகின்றார். அந்த ஆங்கில ஆசிரியையின் இடை, அந்த வேலியோரத்து காஞ்சோண்டி, அடுத்து கமலாவின் மகள், பின்பு கரும்பலகையில் காதலியின் பெயரோடு குறியிட்டு காதல் சமன் செய்தது என்று தாராளமாகக் கவிவரிகளைச் சேர்த்துள்ளார்.