க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). உ.இ.ஜீ.செலிரா, அன்புமணி இரா.நாகலிங்கம், இர.ந.வீரப்பன், ஆ.நடராசன், முத்து வயிரமணி, தெ.ஜெயம் (பதிப்புத் தொகுப்பாசிரியர்கள்). கனடா: ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, ஆடி 1990. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd 24, Mississauga L5T 2J5).
x, (20) பக்கம், விலை: கனேடிய டொலர் 3., அளவு: 21×14 சமீ.
தமிழ்மொழியின் பக்தி இலக்கியத்தில் பள்ளியெழுச்சி என்பதன் பொருள் துயில்எழுதல் ஆகும். துயிலெழுப்பும் பொருண்மையில் பாடப்பெறும் சிற்றிலக்கியம் பள்ளியெழுச்சி எனப்படும். அரசன் தூங்கி விழித்து எழுகையில் அரசனைப் புகழ்ந்து பாடும் பாடலைத் ‘துயிலெடை நிலை” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரண்மனைகளில் பாடிவந்த துயிலெடை நிலை தெய்வம் உறையும் கோயில்களில் பாடப்படுவதாயிற்று. அப்பொழுது துயிலெடை நிலை என்ற பெயர் மாறித் திருப்பள்ளியெழுச்சி என்று புதுப்பெயர் பெற்றது. அப்பொழுது துயிலெடைநிலை என்ற பெயரும் மாறித் திருப்பள்ளியெழுச்சி என்ற புதுப்பெயரும் அமைந்துவிட்டது. பள்ளியெழுச்சி என்னும் சிற்றிலக்கியவகை பக்தி இலக்கிய காலத்திலேயே தோன்றியிருந்தபொழுதும், பாட்டியல் நூல்கள் எதுவும் பள்ளியெழுச்சிக்கு இலக்கணங்களை வரையறுத்துக் கூறவில்லை. மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியைத் தொடர்ந்து, தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கின்றார். இவ்வகையில் பாரதியார் பாடிய பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி, கவிக்குஞ்சர பாரதி பாடிய கீர்த்தனை திருப்பள்ளியெழுச்சி, சிவராமப்பிள்ளை பாடிய இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய பொதுப்பள்ளியெழுச்சி, ராயசொக்கலிங்கம் பாடிய காந்தி திருப்பள்ளியெழுச்சி, ஆ.சிவலிங்கனார் பாடிய தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி முதலான பல பள்ளியெழுச்சி நூல்கள் தமிழில் தோன்றியிருக்கின்றன. இவ்வகையில் ஈழத்துப் பூராடனாரின் தமிழ்த்தாய் பள்ளியெழுச்சியும் அமைகின்றது. பாவேந்தர் பாரதிதாசனின் நூற்றாண்டு நினைவாக இச் சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11313).