மேரா (இயற்பெயர்: த.மேகராசா). பட்டிப்பளை: பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (கொழம்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125, புதிய சோனகத் தெரு).
xiii, 52 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-53621-1-5.
ஆசிரியத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நூலாசிரியர்; மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச் சோலையில், அரசடித் தீவைச் சேர்ந்தவர். தமிழ்மொழியில் சிறப்புப்பட்டம் பெற்றவர். மட்டக்களப்பு, கல்லடி வேலூரில் வசிப்பவர். ஈழப்பித்தன், அரசையூரான், அரசையூர் மேரா, மாரிமகன் ஆகிய புனைபெயர்களில் இலக்கிய வலம் வந்தவர். ஏற்கெனவே வெளிவந்த கலங்கிய வானம் (2005), காலத்தின் காயங்கள் (2007) ஆகிய நூல்களை அடுத்து மூன்றாவதாக வெளிவரும் கவிதைத் தொகுதி இது. 33 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும், ஆசைகளும், நிராசைகளும், விரக்தியும் மாறி மாறி இவரது கவிதைகளில் ஒலிக்கின்றன. சில கவிதைகளில் போராட்டங்களும் சவால்களும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்வதும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான முனைப்பையும் காட்டும் போக்குகளும்; உள்ளன. தன் கவிதைகளில் அரசியல்வாதிகளைச்சாடி திரைமறைவு விடயங்களை வீதிக்குக் கொண்டுவருகிறார். போர்க்கள நிகழ்வுகளின் நிஜங்களை சில கவிதைகள் பதிவுசெய்கின்றன. மனிதநேயம் கொண்ட இக்கவிஞனின் பார்வை சமூக அழிவுகளைக்கண்டு சீற்றம் கொள்கின்றது. ஏமாற்றுவோர், ஏளனம் செய்வோரை எள்ளிநகையாடுகின்றது.