சோ.இளமுருகனார். யாழ்ப்பாணம்: செ.யோ.இளையதம்பி, அமைச்சர், இலக்கியக்கழகம், புலவரகம், நவாலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 351, காங்கேசன்துறை வீதி).
vi, 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
அங்கத இலக்கிய நூலான வேனில் விழா நவாலிக் கிழார் பண்டிதர் சோ.இளமுருகனாரின் சமூகம் சார்ந்த அங்கத இலக்கியப் பாக்களைக் கொண்டது. இத்தகைய பாக்களை முன்னரும் பாடியுள்ளார். அரங்கேற்று வைபவம்- சுத்தானந்த அடிகளார் எழுதிய தமிழுணர்ச்சி என்ற நூலில் தமிழ்மொழி பற்றிக் குறிப்பிட்டிருந்த கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து எழுதப்பட்டதாகும். தேவி திருமணம்- ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் இனத்திற்குச் செய்த இன்னல்களை விபரித்துக் கூறுவதாகும். கலைச்சொல் வைபவம்- இலங்கை அரசு நிறுவியிருந்த கலைச்சொல்லாக்கக் குழுவின் இயலாமையையும் அறிவுக் குறைபாட்டையும் எள்ளிநகையாடுகின்றது. வெள்ளணி விழா- தமிழுணர்ந்த புலவர்க்கு அதனை உணராத மடையர்கள் சிலர் சேர்ந்து பட்டம் வழங்கிப் பாராட்டும் பேதமையைப் பற்றிக் கூறுகின்றது. வானப்பாடி வைபவம்- இலங்கை வானொலியின் ‘தேடியோ சில்லோன்’ தனி மாண்பு பற்றிப் புகல்வது. இவ்வாறே இந்நூலின் வேனில் விழா எனப்படும் ‘பிழா விழா’ பற்றிப் புலவர் அங்கதச் சுவைபட விளக்குகின்றார். ‘சித்திரை வைகாசி ஆனி ஆடி மாதங்களிலே பனையடிதோறும் சிறுகுடில் நிறுவிப் பிழாக்கொடியெடுத்து வேனில்விழா அயரத் தொடங்கினர்’ என்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10737).