கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165 வேம்படி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2014. (பண்டத்தரிப்பு: யே.எஸ்.பிரிண்டர்ஸ்).
(16), 184 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0197-04-0.
கலையார்வனின் பதினேழாவது நூலாக வெளிவரும் குறுங்காவியம் இது. 10.06.1986-22.10.1987 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் நெய்தல் மண்ணான குருநகர்ப் பிரதேசத்தில் இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தால் அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்ட ஐந்து சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டதாக இக்காவியம் வடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு முனைக் கடலில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்தப் பிரதேச மீனவர்களில் 31 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு, பள்ளிக்குடா அகதிகளில் நோயாளர்களை யாழ். வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் வழியில் முகத்துவாரக் கடற்பகுதியில் படகுடன் மூழ்கடிக்கப்பட்ட ஐவர் கொலை நிகழ்வு நிகழ்வு, வீடுகளில் பாதுகாப்பின்றி அருகாமையிலுள்ள புனித பத்திரிசியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில் நால்வரைக் கொலைசெய்த நிகழ்வு, அதே தினம் புனித பத்திரிசியார் கல்லூரியில் விமானக் குண்டுத் தாக்குதலுக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்கு வாகனத்தில் எடுத்துச் சென்ற வேளை வைத்தியசாலைக்கு முன்பாகவே 11பேர் கொல்லப்பட்ட நிகழ்வு, அராலியிலிருந்து தீவகம் நோக்கி வள்ளங்களில் இடம்பெயர்ந்து சென்ற நாளில் கொல்லப்பட்ட 15 பேர் பற்றிய நிகழ்வு எனப் போர்க்காலக் கொடுமைகளையும் அவலங்களையும் நெடுங்கவிதையாக இந்நூலில் நெஞ்சம் உருகப் பதிவுசெய்திருக்கிறார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடமாகாணத்தில் வெளிவந்த சிறந்த மரபுக்கவிதை நூலுக்கான பரிசை வென்ற நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 251127).