தமயந்தி சைமன். நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Likes vegen 9A, 6006 Aalesund, 1வது பதிப்பு, ஜுலை 2016. (தமிழ்நாடு: James Arts Crafts, 872F, Kamak By-Pass Road, Sivakasi 626 189, விருதுநகர்).
120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.
இது ஏழு கதைகள் கொண்ட தொகுதி. ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலச் சூழலை கதையின் தளமாகக் கொண்டு இயங்குகிறது. ஒரு சம்பவத்தை காட்சியாக விரித்து வைத்து விட்டு வாசகனை வேறொரு நினைவுச் சுழல் வழியாக அழைத்துச் செல்லும் உத்திகளால் கதைகள் தனது பாதையை வடிவமைக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் சூழலில் ஆரம்பிக்கும் காட்சிகள் தாயக நிலப்பரப்பில் கரைந்து அழிவதும்; தாயகத்தில் ஆரம்பிக்கும் காட்சிகள் புலம்பெயர்ந்து மேற்கில் மறைவதுமான கதை ஒழுங்கு ஒன்றில் புனைவுத் தந்திரங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்தக் கதைகளின் வசன அடுக்குகளுக்குள் மானுட நேயத்தின் சிதறல்கள் கதையின் போக்கை திசை திருப்பி விடாதபடி சிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. தற்கால வாழ்விற்குள் ஒன்றித்து இழையோட முடியாமல் விலகல் தன்மையுடன் பழைய வாழ்க்கை மீதான ஏக்கங்களையும் போர் சிதைத்துப் போட்ட மனிதர்களையும் பின்தொடர்வதே இந்தக் கதைகளின் முக்கிய பணியாக இருக்கிறது. பெரும்பாலும் இதில் இடம்பெறுகின்ற கதை மாந்தர்கள் கடலோரத்தை அண்டியவர்களாகவும் மீனவ சமூகமாகவும் இருக்கிறார்கள். எளிய வாழ்க்கை முறையைக் கொண்ட இந்த மனிதர்களை கடந்த கால போர்ச்சூழல் எப்படியெல்லாம் சீரழிக்கிறதென்பது வெவ்வேறு கோணங்களின் பல்வேறு தர்க்கங்களின் வழியே ஒவ்வொரு கதைகளிலும் எடுத்தாளப்படுகிறது. கடந்த கால தமிழ் அரசியலை வடிவமைத்த இலட்சியகரமான போர் நியாயங்கள் அனைத்தும் எளிய மக்களின் இயல்பான பார்வைகளுக்கூடாக நீர்த்துப்போகும் செயல்களை இந்தப் பிரதியில் உள்ள கதைத்திட்டங்கள் மேற்கொள்கின்றன. நலிவடைந்த கிராமிய மாந்தர்களை போராளிக் குழுக்கள் கையாண்ட விதம் பிரதியில் பல இடங்களில் விசனமாகவும் முன்வைக்கப்படுகிறது. தமது நிலைப்பாடுகளோடு உடன்பட மறுத்த சிறிய கிராமம் ஒன்றின் மக்கள் கூட்டத்தை புலிகள் இயக்கத்தினர் பழி வாங்கிய விதம் பற்றி ஒரு கதையில் வருகிறது. ஏழாற்றுக் கன்னிகள் என்ற கதையில் தந்தையும் மகனும் கடலில் மீன் பிடிக்கும்போது பெரிய சுறா மாட்டிக் கொள்ள மகன் சந்தோசப்படுகிறான். ஆனால் அந்த மீனைப் பார்த்த தந்தை மகனைப் பார்த்து அது சாக முன்னம் கடல்ல விடு என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் அது குட்டித்தாச்சி மீன். ஆறேழு குட்டிகள் இருக்கும் என்கிறார். இதன் மூலம் ஒரு சமூகத்தின் உயிர்கள் மீதான கரிசனை ஆழமாக உணர்த்தப்படுகிறது. இவ்வகையில் இந்நூலில் உள்ள கிற்றார் பாடகன், ஏழாற்றுக் கன்னிகள், நாச்சிக்குடா. அப்பு, தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும், மண்டா, எட்டாம் பிரசங்கம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் இடம்பெற்றுள்ளன.