மெலிஞ்சிமுத்தன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
(2), 86 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 21×14 சமீ.
இந்நூலில் மெலிஞ்சிமுத்தன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயரும் சாமங்களின் கதை (கிளாலி 1993-1994), கொழுக்கட்டைக் கள்வர்கள், இல்ஹாம், பனி மூடிய நதி, மொட்டாக்கு, ராணி, பேர்த்தோக்கள் எப்போதாவது தான் வருகிறார்கள். கூட்டிச்செல்லும் குரல், அலாரக் கதவு, சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம், நிழலின் குரல், நிலையெடுத்த பள்ளம் ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. ஊர்காவற்றுறைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நரையான்பிட்டி என்ற குட்டித்தீவுண்டு. மார்கழி-சித்திரை மாத காலப்பகுதியில் சைபீரிய நாரைகள் வந்து தங்கிச்செல்வதால் இப்பெயர் உருவாகியது என்பர். அங்குள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்காக மெலிஞ்சிமுனைக் கிராம மக்கள் சென்று வருவார்கள். ஏழாத்துப் பிரிவெனச் சொல்லப்படும் ஏழுகடலாறுகள் அங்கு ஓடுவதைத் தீவுப்பகுதி மீனவர்கள் அனைவருமே நன்கறிவார்கள். ஏழாத்துப்பிரிவின் ஒரு கூறு பிரண்டையாறு. இந்த ஆறுகளில் கீழ்நீர்வாடு-சோநீர்வாடு என இருவகை நீரோட்டங்களுண்டு. அதைப் போல் மக்களின் வாழ்க்கையின் வலிகள் இக்கதைகளுள் உள்ளோடுகின்றன. இப்பிரதேச மீனவ மக்களிடம் பல சொற்கள், பழமொழிகள் பாவனையிலுள்ளன. அவற்றைப் பதிவு செய்யும் வகையில் இத் தொகுப்பில் அவர்களின் வாழ்வும் உலைவும் இயல்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. 1975இல் இலங்கையில் பிறந்த மெலிஞ்சிமுத்தன் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும்; ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’, ‘என் தேசக்கரையோரம்’, ‘முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’, ‘அத்தாங்கு’ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61519).