வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). மன்னார்: தேனீ மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).
xix, 89 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-4661-00-4.
வாழ்வுத் தவிப்பைக் கொண்ட எழுத்துக்கள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களின் பிரதிபிம்பங்களாகவே இருக்கும் என்ற ஆசிரியரின் கருத்துக்கமைவாக இந்நூலில் சலோனி, வானதியின் தோட்டம், முடியாத ஏக்கங்கள், அவளின் பிரச்சினை, மைனாவே மைனாவே மழை வருமா, ஆறாத காயம், ஜன்னல் கனவுகள், காணாமல் போனவனின் மனைவி, மனிதமிருக்கிறது மரணிக்காமல், எதிர்பார்ப்பு, முரண், குங்கும கேள்வி ஆகிய 12 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள சில கதைகள் முன்னர் 2012இல் வெளியான இவரது காணாமல் போனவனின் மனைவி என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன. மன்னார் மாவட்டத்தில் அடம்பன் கிராமத்தில் 1974இல் பிறந்தவர் வேலு சந்திரகலா. 1991இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதி யுத்தம் வரை போராளியாகச் செயற்பட்டவர். 1993இல் வெடிவிபத்தில் தனது ஒற்றைக் கண்ணையும் ஒற்றைக் கையையும் இழந்தவர். 1997 முதல் எழுத்துத் துறையில் பிரவேசித்தவர். 1999 முதல் 2004 வரை புலிகளின் குரல் வானொலியில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டவர். பெண்புலிகளின் சுதந்திரப் பறவைகள் பத்திரிகையிலும் பணியாற்றியவர். இலங்கைப் படையினரின் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட உயிரே உயிரே நாவல் தினமணி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அத்துடன் இறுதி நாட்களும் எனது பயணமும் என்ற முள்ளிவாய்க்கால் யுத்தகாலப் பயணக்கட்டுரை இணையங்களில் பரபரப்புடன் வாசிக்கப்பட்டது. அது பின்னர் ஈழப்போரின் இறுதி நாட்கள் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. வெற்றிச் செல்வி தற்போது மாற்றாற்றல் உடையவர்களுக்காகச் செயலாற்றத் தொடங்கியிருக்கும் மன்னார் மாவட்ட தொண்டு நிறுவன அமைப்பொன்றில் பகுதிநேர கள உத்தியோகத்தராக செயற்பட்டு வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53406).