11803 யாரிலிகள்: சிறுகதைத் தொகுப்பு.

க.கோபாலபிள்ளை. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

136 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-4777-9.

ஈழத்தில் அண்மைக்கால நிகழ்வுகளையும், யாழ்ப்பாணச் சூழ்நிலையையும் மீட்டிப் பார்ப்பதாகவும் காட்சிப்படுத்துவதாகவும் இச்சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. ஈழத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கும் இடையில் மூண்ட சண்டையில் பலரின் உயிரும் வாழ்க்கையும் பறிபோன நிலையில், பெண்களின் மானமும் இன வெறியர்களுக்கு இரையான பின்னணியை கதைக்கருவாகக் கொண்டது. அத்தகைய ஒரு பாத்திரப் படைப்பாக தவறிய தாளங்கள் என்ற கதையில் செல்லம்மா உருவாக்கப்பட்டிருக்கிறார். சாதிய ஒடுக்குமுறை பற்றிப் பேசுவதாக பிரகடனம்- என்ற சிறுகதை அமைகின்றது. முதிர்ச்சியின் விளிம்பிலிருந்தும் தான் வளர்த்த மாடுகளையே தனது சொந்தங்களாகக் கருதி வாழும் ஒரு தந்தையின் பாத்திரவார்ப்பு உழைப்பு என்ற சிறுகதையில் இடம்பெறுகின்றது. பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் ஆட்சியில் அவர்களை அண்டி வாழ்வதில் பெருமைகொள்பவராக புதிய சுவடுகள் என்ற கதையில் சங்கரப்பிள்ளையின் பாத்திரவார்ப்பு அமைகின்றது. இன்று மதவாதிகளால் மிருக வேள்வி  போராட்ட ஆயுதமாகக் கைக்கொள்ளபடும் அரசியல் சூழலில் மிருகவேள்வியின் தொடர்பாக நிகழும் மனித உயிர்ப்பலி பற்றி பலி என்ற கதை பேசுகின்றது. திருவிழா என்ற கதை, படித்துமுடித்தபின் வேலையற்றிருக்கும் இளைஞரின் நிலை பற்றியதாகவும், தனிமரம் என்ற கதை, வறுமையின் கொடுமையால் தன் மகனையே இழக்கும் தாயின் கண்ணீர் காவியமாகவும் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் எஞ்சிய யாரிலிகள், மிளகாய் செல்லையர், கபளீகரம் ஆகிய கதைகளும் மண்வாசனையுடனும் வாழ்க்கை அனுபவங்களுடனும் இன்னும் மறையாத வடுக்களின் வெளிப்பாடாகவும் அமைந்து தரமானதொரு சிறுகதைத் தொகுப்பாக ‘யாரிலிகள்’ நிலைத்துள்ளது.

ஏனைய பதிவுகள்