11817 அப்பால் ஒரு நிலம்.

குணா கவியழகன். சென்னை 51: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 14: ஆர். கே. பிரிண்ட்ஸ்).

270 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21.5×14 சமீ.

தமிழறிந்த திணைகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத போர் நிலத்து மக்களின் வாழ்வுப் பாடுகளை தன் யதார்த்த நிலையில் நின்று சொல்லமுனையும் ஒரு நாவல் இது.

ஈழத்தமிழரின் இன அழிப்பு உலக அரங்கின் கவனத்திற்கு வந்தமைக்கான பிரதான காரணமாக அமைந்தது அவர்களின் ஆயுதப் போராட்டமாகும். வன்னியின் முற்றுகைப் போரை விடுதலைப்புலிகள் வென்றமையே ஆயுதப்போர் அரசியற் கவனத்தைப் பெறக் காரணமாக அமைந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் கடந்த நூற்றாண்டின் மிக நீண்ட சமராகக் கருதப்பட்ட ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கையை இறுதியாக புலிகள் வென்ற வரலாற்று முக்கியத்துவமான சம்பவத்திலிருந்து இந்நாவல் ஆரம்பிக்கின்றது. இச்சமரை வெல்ல முடிந்தமைக்கான காரணமாக அமைந்தது ‘ஓயாத அலைகள் 2’ என்ற நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சி நகரைப் புலிகள் வெற்றிகொண்டமையேயாகும். அந்தச் சமருக்குத் தேவையான வேவு நடவடிக்கைகள் இந்நாவலினை வளர்த்துச் செல்கின்றன. இது போரை வென்ற வழியின் பின்னோக்கிய பார்வை. வன்னிப்போரின் மனித வாழ்வினை,  இந்த வேவு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டும், வீரன், மணி போன்ற போராளிகளின் வீரம் செறிந்த பாத்திரப் படைப்பினூடாகவும் அவர்களது அன்றாட அலுவல்கள் மனஉணர்வுச் சிக்கல்கள் ஆகியவற்றின் சுவையூட்டல்களுடனும் இந்நாவலானது குணா கவியழகனால் நகர்த்திச் செல்லப்படுகின்றது. இக்கதைசொல்லி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர். இறுதிநாட்கள் வரை வன்னியில் வாழ்ந்தவர். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நாட்களில் இராணுவத் தடுப்பு முகாம் என்ற முள்வேலிக்குள் அடைபட்டிருந்தார். பின்னர் விடுதலையாகி ஐரோப்பிய நாடான ஒல்லாந்தில் அரசியல் அடைக்கலம்  பெற்று வாழ்கின்றார். ஈழப்போரிலக்கியத்தின் ஒரு பரிமாணத்தைப் பதிவுசெய்யும் இந்நூல், போர்க்கால வாழ்வின் மற்றொரு பகுதி இவருக்களித்துள்ள அனுபவத்தை நஞ்சுண்ட காட்டையும், விடமேறிய கனவையும் தொடர்ந்து மற்றொரு நாவலாகக் கட்டவிழ்த்துள்ளார்.

ஏனைய பதிவுகள்